ICC Mens World Cup 2023: நெதர்லாந்து அணி கொடுத்த வாய்ப்பு.. நெட் பவுலராக செல்லும் சென்னை ஸ்விக்கி ஊழியர்.. யார் இவர்?
ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் லோகேஷ் குமார், அவர் நினைத்துப் பார்க்காத வகையில் ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியில் ஒரு அங்கமாக இருக்கப் போகிறார்.
இன்று உங்களுக்கு கிடைக்காத வாய்ப்புகள் நாளை வேறு வடிவத்தில் கிடைக்கலாம். அது கடவுளின் திரைக்கதையோ? விதியோ? எப்படி நீங்கள் அழைப்பீர்களோ அப்படி வைத்துகொள்ளுங்கள். நாம் ஒன்றை செய்ய முயற்சிக்கும்போது ஒரு சிலர் நமக்கு எதிராகவும், சிலர் நமக்கு ஆதரவாக மகிழ்ச்சியைத் தருகிறார்கள், ஆனால் அது மீண்டும் நடக்காமல் போகட்டும்! விரக்தியில் சிக்கித் தவிப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இன்னும் சில விஷயங்கள் நடக்கின்றன. தற்போது சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்ற கிரிக்கெட் வீரருக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஸ்விக்கியில் டெலிவரி பாய் ஆக பணிபுரியும் லோகேஷ் குமார், அவர் நினைத்துப் பார்க்காத வகையில் ஒருநாள் உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியில் ஒரு அங்கமாக இருக்கப் போகிறார். இது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத பயணமாக அமைந்துள்ளது.
யார் இந்த லோகேஷ் குமார்? என்ன வாய்ப்பு கிடைத்தது..?
சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் ஐபிஎல் மற்றும் சர்வதேச அளவில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக களமிறங்க வேண்டும் என்று கனவு கண்டு வருகிறது. தனது கல்லூரி படிப்பை முடிவித்துவிட்டு, கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முயற்சி செய்தார். ஆனால் கிரிக்கெட்டில் போட்டி மற்றும் அரசியலால் அவரது கனவு கனவாகவே இருந்தது. ஐபிஎல்-ல் விளையாடாவிட்டாலும், தமிழ்நாடு கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) அல்லது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நடத்தும் மூன்றாம் டிவிஷன் லீக்கில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இனி நம் வாழ்க்கையில் கிரிக்கெட் இல்லை என நினைத்த லோகேஷ் குமார், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2018 முதல் ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இப்படி, நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருக்கும் வேலையில் இருந்தாலும் விளையாட்டின் மீதான மோகம் மட்டும் அழியவில்லை. லோகேஷ் முடிந்தவரை கிரிக்கெட் விளையாடி, அவருக்கு பிடித்த விளையாட்டுக்காக நேரத்தையும் செலவிட்டார்.
Thank you for the overwhelming response to our net bowlers hunt, India. Here the 4 names who will be part of the team's #CWC23 preparations. 🙌 @ludimos pic.twitter.com/arLmtzICYH
— Cricket🏏Netherlands (@KNCBcricket) September 19, 2023
நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் கிடைத்த வாய்ப்பு:
இந்நிலையில், லோகேஷின் கனவை நனவாக்கப் போகிறது நெதர்லாந்து அணி. இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான சுழல் ஆடுகளங்கள் மற்றும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குறித்து தெரிந்துகொள்ள நெதர்லாந்து அணி முடிவு செய்துள்ளது. அதன்படி, நெதர்லாந்து அணி சார்பில் எங்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை' என்று அறிவித்தது. இதற்காக அவர்களின் பந்துவீச்சு தொடர்பான கிளிப்களை சமூக வலைதளங்களில் அனுப்பினால் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்துகொள்வோம் என அறிவித்தது. இதையடுத்து, நெதர்லாந்து அணிக்கான நெட் பவுலர்களுக்கான விளம்பரத்தைப் பார்த்த லோகேஷ், உடனடியாக கிரிக்கெட் நெதர்லாந்து அணிக்கு தான் பந்து வீசும் வீடியோவை அனுப்பியுள்ளார். நெதர்லாந்து கிரிக்கெட் குழு, இந்தியாவில் லோகேஷை போன்ற சுமார் பத்தாயிரம் பேரிடம் விண்ணப்பங்களைப் பெற்றது. அதில், நான்கு நெட் பவுலர்களை நெதர்லாந்து கிரிக்கெட் குழு தேர்வு செய்தது, அதில் லோகேஷ் பெயரும் இடம்பெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வர் யார்..?
- ஹேமந்த் குமார் (ராஜஸ்தான் - இடதுகை வேகப்பந்து வீச்சாளர், முன்பு RCB அணிக்காக நெட் பவுலராக இருந்தார்.)
- ராஜாமணி பிரசாத் (தெலுங்கானா - இடதுகை வேகப்பந்து வீச்சாளர், மாநில ரஞ்சி அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெட் பவுலராக பணியாற்றினார்)
- ஹர்ஷா சர்மா ( ஹரியானா - இடதுகை சுழற்பந்து வீச்சாளர், ராஜஸ்தான் ராயல்ஸ் நெட் பவுலர்)
- லோகேஷ் குமார் ( தமிழ்நாடு - சுழற்பந்து வீச்சாளர்)
இடது கை சுழற்பந்து வீச்சாளரான லோகேஷ், நெதர்லாந்து அணியால் மர்ம சுழற்பந்து வீச்சாளராக பெயரிடப்பட்டுள்ளார். மேலும் இந்த நான்கு பேரும் நெதர்லாந்து அணிக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்..? இவர்களின் உதவியுடன் நெதர்லாந்து அணி எப்படி முக்கியமான போட்டிகளில் வெற்றிபெற முடியும்..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், ஏற்கனவே பெங்களூரு சென்றடைந்த நெதர்லாந்து அணி, ஆலூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலே குறிப்பிட்ட நான்கு பந்துவீச்சாளர்கள் நெதர்லாந்து அணியில் இணைந்தனர்.
Our first training session in India for the #CWC23 began with a small induction ceremony for our four new net bowlers from different parts of India. 🙌 pic.twitter.com/ug0gHb73tn
— Cricket🏏Netherlands (@KNCBcricket) September 20, 2023
இதுகுறித்து பேசிய லோகேஷ் குமார், “நெதர்லாந்து அணிக்கு நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். எனது திறமை இங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணி தனக்கு நல்ல வரவேற்பு அளித்ததோடு, அந்த அணியின் குடும்ப உறுப்பினராகிவிட்டேன்” என்று தெரிவித்தார்.