ICC Mens ODI Rankings: சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை... பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி அசத்திய இந்தியா..!
ஐசிசியின் சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 76* ரன்களும், ஷிகர் தவான் 31* ரன்களும் எடுத்தனர். இதனால் 18.4 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின்பு ஐசிசி சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 108 புள்ளிகள் பெற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது.
A big change on the latest @MRFWorldwide ICC ODI Team Rankings 📈#ENGvINDhttps://t.co/H3XUOTyRe5
— ICC (@ICC) July 13, 2022
இந்தப் பட்டியலில் 127 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடையும் பட்சத்தில் பாகிஸ்தான் மீண்டும் 3வது இடத்தை பெற்றுவிடும். ஆகவே இந்திய அணி அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் தரவரிசையில் தொடர்ந்து 3வது இடத்தை பிடிக்க முடியும்.
மேலும் இந்திய அணிக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடர் உள்ளது. அந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியைவிட அதிகமாக புள்ளிகள் பெற முடியும். பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் நெதர்லாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆகவே அதற்கு முன்பாக இந்திய அணி தரவரிசையில் கனிசமான புள்ளிகளை பெற்று முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்