Watch Video WC Qualifiers: படாரென உள்ளே வந்த யார்க்கர்.. தடாலென விழுந்த நிக்கோலஸ் பூரன்.. வைரலாகும் வீடியோ!
கடந்த வியாழன் (ஜூன் 22) அன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த முழு தொடரையும் இந்தியாவே நடத்த இருப்பதால் எக்கசக்க எதிர்பார்ப்புகள் எகிறி வருகிறது.
ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் ஏற்கனவே தகுதிப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்காக 10 அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகின்றன. முதல் ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 1996ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியும் இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த வியாழன் (ஜூன் 22) அன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது யார்க்கர் பந்தை சந்தித்த நிக்கோலஸ் பூரன் நிலை தடுமாறி கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
என்ன நடந்தது..?
நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நேபாள பந்துவீச்சாளர் கரண் கே.சி ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார். அதை பூரன் ஸ்டம்புக்குள் நுழைய விடாமல் தடுக்க பேட் கொண்டு நிறுத்தினார். அப்போது, நிலை தடுமாறிய அவர் நிற்க முடியாமல் கீழே விழுந்தார். இந்த வீடியோவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முதல் இன்னிங்ஸின் 34வது ஓவரின்போது இந்த சம்பவம் நடந்தது.
யார் வெற்றிபெற்றது..?
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 132 ரன்கள் குவித்தார். நிக்கோலஸ் பூரனும் தன் பங்கிற்கு 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்தார்.
340 ரன்களை துரத்திய நேபாள அணி 49.4 ஓவரில் 238 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. நேபாள அணி சார்பில் ஆரிப் ஷேக் 63 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இது தவிர அல்சாரி ஜோசப், அலிக் ஹுசைன் மற்றும் கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், கைல் மேயர்ஸ் 1 விக்கெட்களும் எடுத்திருந்தனர்.