ENG Vs AFG Match Highlights: உலகக்கோப்பையில் டாப் கிளாஸ்: அதிர்ச்சி கொடுத்த ஆஃப்கானிஸ்தான்: சுழலில் சுருண்ட இங்கிலாந்து!
ENG Vs AFG Match Highlights: முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது.
13வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அரையிறுதிக்கு முன்னேறும்.
குர்பாஸ் அதிரடி:
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 15ஆம் தேதி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி டெல்லியில் உள்ள ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குர்பாஸ் பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினார். மற்றொரு ஆட்டக்காரர் இப்ராஹிம் பொறுமையாகவே விளையாடி வந்தார். இவர்கள் இருவரும் வலுவான தொடக்கத்தினை அமைத்துக் கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 114 ரன்களுக்கு இழந்தது. தொடக்க வீரர்களில் குர்பாஸ் மட்டும் 57 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 80 ரன்கள் குவித்து மிரட்டினார். முதல் விக்கெட்டினை இழந்த பின்னர் அடுத்த மூன்று விக்கெட்டுகளை 122 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் போட்டி மெல்ல மெல்ல இங்கிலாந்து கட்டிப்பாட்டிற்கு வந்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர் இதனால் ஆஃப்கான் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக தன்னிடம் இருந்த சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி விக்கெட்டுகள் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஹாரி ப்ரூக் மட்டும் 66 ரன்கள் சேர்த்தார். இவருக்கு அடுத்து மலான் மட்டும் 32 ரன்கள் எடுத்திருந்தார். இவர்கள் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடாததால் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி தனது பயணத்தினை தொடங்கியது. இங்கிலாந்து அணி சார்பில் ப்ரூக் மட்டும் நீண்ட நேரம் போராடி வந்தார். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் தனது விக்கெட்டினை இழக்க இங்கிலாந்து அணியின் தோல்வி உறுதியானது. ப்ரூக் விக்கெட்டிற்குப் பின்னர் இங்கிலாந்து அணியின் டைல் எண்டர்ஸ் மட்டும்தான் இருந்தனர். அவருகளும் தங்களுக்கு லாவகமாக வந்த பந்தினை பவுண்டரிகளுக்கு விரட்டி வந்தது மட்டும் இல்லாமல், சீராக ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்து வந்தனர். இது இங்கிலாந்து அணியின் தோல்வி வித்தியாசத்தைதான் குறைத்ததே தவிர ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
இறுதில் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப் மற்றும் ரஷித் கான் தலா மூன்று விக்கெட்டுகளும் நபி இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.