"தேர்வுக்குழுவில் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது…" - ராயுடு குற்றச்சாட்டுக்கு தேர்வுக்குழு தலைவர் பதில்!
2005 ஆம் ஆண்டு ஆந்திரா அணிக்காக ராயுடு விளையாடிய போது, அந்த அணியின் கேப்டனாக இருந்த பிரசாத்தின் சில அணுகுமுறைகள் தனக்கு பிடிக்கவில்லை என்று ராயுடு குறிப்பிட்டதால் இருவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது.
யுவராஜ் சிங், ரெய்னா, தோனி போன்றோர் ஆண்டு வந்த மிடில் ஆர்டரில் 2018 காலங்களில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. அப்போது இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினைகளுக்கு விடையாகக் கருதப்பட்ட அம்பதி ராயுடு 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முக்கியமான வீரராக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆல்-ரவுண்ட் பங்களிப்பு கொடுத்த, விஜய் ஷங்கருக்கு அவருடைய இடம் சென்றது. அப்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை காயம் காரணமாக இழந்தபோதும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. விஜய் சங்கர் காயமடைந்த பிறகும், ராயுடு புறக்கணிக்கப்பட்டார். அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தபோது, பேட்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பிரசாத் மீது ராயுடு குற்றச்சாட்டு
TV9 தெலுங்கிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியின் போது, ராயுடு தனது 2019 உலகக் கோப்பை தேர்வு பற்றித் திறந்து பேசினார். அவருக்கும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்துக்கும் முன்பு சில பிரச்னைகள் இருந்ததாகவும், அதற்காக பழிவாங்குவதாகவும் வெளிப்படுத்தினார். 2019 உலகக் கோப்பையின் போது பிரசாத் தலைமை தேர்வாளராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு ஆந்திரா அணிக்காக ராயுடு விளையாடிய போது, அந்த அணியின் கேப்டன் பிரசாத். அப்போது அணியின் கேப்டனின் (பிரசாத்) சில முறைகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் ராயுடு குறிப்பிட்டதால் அப்போதிருந்தே இருவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது.
ஐந்து தேர்வர்கள் இருப்போம்
ராயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இந்திய வீரரான பிரசாத் Timenownews.com உடன் பேசிய போது பதிலளித்தார். "தேர்வுக் குழுவில் ஐந்து தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரே ஒரு நபரின் முடிவு எடுக்கப்படுமா அல்லது அது ஒருமித்த முடிவாக இருக்குமா என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள். ஒரு தனி நபர் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றால், அந்த இடத்தில் ஐந்து தேர்வாளர்கள் எதற்கு?" என்று பேசினார்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காட்டும் இடமல்ல அது
"எனவே எடுக்கப்படும் எந்த முடிவும் முழு தேர்வுக் குழுவின் ஒருமித்த கருத்துடன் மட்டுமே நடக்கும். எனவே இது ஒரு கூட்டு முடிவு. தனிப்பட்ட முடிவு அல்ல. நான் முன்மொழியலாம், ஆனால் வேறு யாராவது அதை ஏற்க வேண்டும். அப்போதுதான் அது நடக்கும். குழுவில் தனிப்பட்ட முடிவு எதுவும் நடக்காது," என்று அவர் மேலும் கூறினார். மேலும், ராயுடுவின் ஆந்திர கேப்டன்சி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரசாத், "ஒரு அணியில், நீண்ட கிரிக்கெட் சீசனில் ஒரு சிறிய வித்தியாசம் ஏற்படலாம். சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அது ஒருவரை புறக்கணிக்க காரணமாக இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு போன்ற பெரிய மேடையில் சென்று என் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை காட்ட முடியாது. உலகக் கோப்பைக்கு முந்தைய அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் ராயுடு இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போதும் நான்தான் தேர்வுக்குழு தலைவர்," என்றார்.