kohli: எங்கும் தோனி...! எதிலும் தோனி..! விராட் கோலியின் நெகிழ்ச்சிப் பதிவு
எங்கு சென்றாலும் தோனி இருப்பதாக, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான, தோனி மற்றும் கோலி இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் தோனியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணியில் அறிமுகமான கோலி, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் துணை கேப்டனாக மாறினார். பின்னர் தோனியின் ஓய்விற்குப் பிறகு, அவரிடம் இருந்து பெற்ற சிறந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றார். கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்தார். ஆனாலும், ஐசிசி தொடர் எதையும் வெல்லாதது அவருக்கு பின்னடைவாக மாறியது.
இதனிடையே, சில காலங்கள் அவரது ஃபார்மும் மோசமாக மாற, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினர். பின்பு சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய கோலி, ஆசியகோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோலி, தான் மிகவும் மோசமான மனநிலையில் இருந்தபோது தனக்கு தோனி தான் சரியான அறிவுரையை வழங்கி வழி நடத்தினார் எனத் தெரிவித்தார். இதேபோன்று தன்னை சிறந்த வீரராகவும், அணியின் தலைவனாகவும் மேம்படுத்திக் கொள்ள தோனியே தனக்கு உதவியதாகவும் பல இடங்களில் பதிவு செய்துள்ளார். தோனி உடனான தனது நட்பு குறித்தும் ஒவ்வொருமுறை கோலி பேசும்போதும், அன்றைய நாளின் பரபரப்பு செய்தியாகவே அவர்கள் மாறிவிடுகின்றனர்.
அந்தவகையில், தற்போது கோலி வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் கோலி வாங்கிய தண்ணீர் பாட்டில் ஒன்றில், தோனியின் புகைப்படம் இருந்துள்ளது. அதனை புகைப்படம் எடுத்து, எங்கும் சென்றாலும் தோனி இருக்கிறார். தண்ணீர் பாட்டிலில் கூட அவர் இருக்கிறார் என தோனியை டேக் செய்து, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தோனி மற்றும் கோலியின் ரசிகர்கள், சமூகவலைதளங்களில் பகிர்ந்து ”மஹிராட்” என கோலி மற்றும் தோனியின் நட்பை குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்தபோதும், கோலி அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.