Shoaib Akhtar : "சச்சின் சேவாக்கை தூக்கிருந்தா ஆட்டம் க்ளோஸ்" : 2011 உலகக்கோப்பை செமிஃபைனல் குறித்து அக்தர்..
2011 உலகக்கோப்பையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, "கிடைத்திருந்தால்…" என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் நரம்பு புடைக்க பேசி உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சினை அவர் எதிர் கொண்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் பந்துவீச்சுக்கு எதிராக அவர் சிறப்பாக பேட் செய்தது இன்றளவும் அனைவராலும் பேசப்படுகிறது. பல்வேறு தருணங்களில் சச்சின் டெண்டுல்கர் அக்தரின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டுள்ளார். சச்சினுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பவுன்சர்களை அக்தர் வீசுவது வழக்கம். இப்படி சச்சினுக்கும் அக்தருக்கும் இடையே போர் நடப்பது வழக்கம். ஆனால் இருவரும் ரிட்டயர்டு ஆகி பல வருடங்கள் ஆகியும் இன்னமும் அந்த போட்டிகள் குறித்து பேசுவது அக்தரின் வழக்கம். அப்படி தற்போது 2011 உலகக்கோப்பையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, "கிடைத்திருந்தால்…" என்று நரம்பு புடைக்க பேசி உள்ளார்.
2011 உலகக்கோப்பை
2011ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மும்பை வான்கடேவில் நடந்த ஃபைனலில் இலங்கைக்கு எதிராக தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கோப்பையை வென்ற தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள். அந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான உலகக்கோப்பை ஆகும். அதிலும் பாகிஸ்தானுடன் நடந்த அரை இருதிப் போட்டி பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி பைனலுக்கு சென்றது.
அக்தர் இல்லை
அந்த போட்டியின் ஸ்க்வாடில் அக்தர் இருந்தாலும், மொஹாலியில் நடைபெறும் அந்த போட்டியில் ஆட 'அன்ஃபிட்' என்று கூறி பாகிஸ்தான் நிர்வாகம் அவரை பெஞ்சில் இருத்தியது. அந்த போட்டி குறித்து அவர் பேசியுள்ளார். "2011 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டி, எப்போது நினைத்தாலும் உறுத்தக்கூடிய ஒரு போட்டி. அணி நிர்வாகம் என்னை கண்டிப்பாக விளையாட செய்திருக்க வேண்டும். எனக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி அது. பாகிஸ்தான் கொடியை வான்கடேவில் பறக்க விட இரண்டே இரண்டு போட்டிகள்தான் இருந்தன என்பது எனக்கு தெரியும். இந்திய அணி கடுமையான அழுத்தத்தில் இருந்தது என்று எனக்கு தெரியும். ஏனெனில் அனைத்து மீடியாவும் நாங்கள் தான் இந்தியாவை விட பலம் குறைந்த அணி என்று கூறிக்கொண்டு உள்ளனர். அதனால் எங்களுக்கு அழுத்தம் இல்லாதது ஒரு நல்ல விஷயம். " என்று கூறினார்.
கண்டிப்பாக அவுட் ஆக்கி இருப்பேன்
மேலும் பேசிய அவர், "முதல் 10 ஓவர்கள் தான் மிகவும் முக்கியமானது என்று எனக்கு தெரியும். அதிலேயே அவர்களது டாப் ஆர்டரை உடைத்துவிட்டால், கண்டிப்பாக ஆட்டம் எங்களுடைது என்று எனக்கு தெரியும். சச்சினையும் சேவாக்கையும் மட்டும் வீழ்த்தினால் போதும், இந்தியாவை குலைத்து விடலாம். ஆனால் என்னை அவர்கள் ஆட்டத்தில் சேர்க்கவில்லை. வெளியில் இருந்து பாகிஸ்தான் தோற்பதை பார்ப்பதற்கு நரக வேதனையாக இருந்தது. ஆனால் என்னை அன்ஃபிட் என்றார்கள். நான் வார்ம் அப்பில் 8 ஓவர்கள் வீசினேன். ஆனாலும் என்னை சேர்க்கவில்லை. சேர்த்திருந்தால் கண்டிப்பாக என்னவாவது செய்து சச்சினையும், சேவாக்கையும் அவுட் ஆக்கி இருப்பேன். நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தேன்" என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்