Gautam Gambhir : இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
Gautam Gambhir : ரோகித் இல்லை என்றால் இவர் தான் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ள முடியாமல் போனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இந்திய அணியை தலைமை தாங்குவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகள்:
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுகளுக்கு பிறகு இழந்தது, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் மிக மோசமாக வயிட் வாஷ் ஆனது, இதன் காரணமாக இந்திய அணி குறித்து கடும் விமர்சனம் எடுத்துவைக்கப்பட்டது,முக்கியமாக பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் மற்றும் மூத்த வீரர் விராட் கோலியை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக முதற்கட்டமாக இந்திய அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள் இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து சரமாரியான கேள்விகளை கம்பீர் முன்பு வைத்தனர்.
இதற்கு பொறுமையாக பதிலளித்த பேசிய கம்பீர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்ப்பட்ட தோல்வி குறித்து நான் சமாளிக்க போவது கிடையாது, நீங்கள் எங்கள் மீது வைக்கும் விமர்சனர்த்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் தான். அந்த தோல்வியை நாங்கள் மறந்துவிட்டு முன்னேறி செல்ல விரும்புகிறோம். எனக்கும் கேப்டன் சர்மாவுக்கு இடையிலான உறவு நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
ரோகித் விராட் ஃபார்ம்:
ரோகித் மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எனக்கு கவலையில்லை. இருவரும் போராடக்கூடிய குணம் கொண்டவர்கள். அவர்களிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உள்ளது. அதனால் அவர்கள் நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று பேசியிருந்தார்.
புதிய கேப்டன் யார்?
ஒரு வேளை ஆஸ்திரேலியாவுக்கான முதல் போட்டியில் ரோகித் சர்மாவால் பங்கேற்க முடியாத சூழல் உருவானால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இந்திய அணியை தலைமை தாங்குவார் எனவும் ரோகித்துக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் கே.எல் ராகுல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கே.எல் ராகுல் போல ஒரு வீரரை மற்ற அணிகளில் காட்டுங்கள் பார்க்கலாம். அவரை நாம் எந்த இடத்தில் வேண்டும் ஆனாலும் ஆட வைக்கலாம். அப்படிப்பட்ட திறமை அவரிடம் உள்ளது என்று கம்பீர் தெரிவித்தார்.