Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir : ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கான பதிலை, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Gautam Gambhir : ஜெய்ஷ்வால் மற்றும் ருதுராஜிற்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என, தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் பேசியுள்ளார்.
ஒருநாள் தொடரை வென்ற இந்தியா:
டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழிவாங்கும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசிய, விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார். இதுபோக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோரும் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தனர். ஆனால் இருவருமே ஒருநாள் போட்டிக்கான அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கில் மற்றும் பாண்ட்யாவின் காயம் காரணமாகவே இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொடரை வென்றது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
2027 உலகக் கோப்பையில் வாய்ப்பு?
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசிய ஜெய்ஷ்வால் மற்றும் ருதுராஜின் பெயர்கள், 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பரிசீலிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்ப்டது. அதற்கு பதிலளிக்கையில் “முதலில் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். நிகழ்காலத்தில் நிலைத்திருப்பதுதான் மிக முக்கியமான சிந்தனை. அணிக்குள் வரும் இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் முக்கியம். ருதுராஜ் கெய்க்வாட் போன்ற ஒருவர், அவர் பேட் செய்த இடத்தில் இருந்து வெளியேறினார். அவர் ஒரு தரமான வீரர் என்பது நமக்குத் தெரியும். இந்தியா ஏ அணியுடன் அவர் கொண்டிருந்த ஃபார்முக்கு இந்த தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நாங்கள் விரும்பினோம். உண்மையில் அவர் அந்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் கைப்பற்றினார்.
ருதுராஜ், ஜெய்ஷ்வாலை பாராட்டிய கம்பீர்
இரண்டாவது ஆட்டத்தில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தபோது சதம் அடித்தார். நாங்கள் 2 விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்திருந்தோம், அப்போது அவர் சதம் அடித்தது சரியான தரமானது யஷஸ்வியும் அப்படித்தான். அவர் எவ்வளவு தரம் வாய்ந்தவர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் என்ன செய்கிறார். வெளிப்படையாக, இது அவரது வாழ்க்கையின் தொடக்கமாகும், குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில். நம்பிக்கையுடன், அவருக்கு முன்னால் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது, ருதுராஜுக்கும் அப்படித்தான் இருக்கும்," என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ரோகித், கோலி உள்ளே? வெளியே?
மறுபுறம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவதால் 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோகித் மற்றும் கோலி விளையாடுவது சந்தேகமே என பல தரப்பிலும் கூறப்பட்டது. கம்பீரும் அதையே விரும்புவதாக பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான் தொடரில் சதம் விளாசி, ரோகித் தொடர்நாயகன் விருது வென்றார். உள்ளூரில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசி கோலி தொடர்நாயகன் விருது வென்றார். இதன் மூலம் 2027ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டு என்ற எண்ணம் இருந்தால், இந்திய அணிக்கு கோலி மற்றும் ரோகித் அவசியம் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




















