Mithali Raj Records: பெண்கள் கிரிக்கெட்டின் மூத்தவள்...! யாருமே நெருங்க முடியாத மிதாலியின் சாதனைகள்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜின் சாதனைகளை கீழே பட்டியலாக காணலாம்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முகமாக சூப்பர்ஸ்டாராக திகழும் மிதாலி ராஜ் இன்று 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பெண்கள் கிரிக்கெட்டில் யாருமே தொடமுடியாத சாதனைகள் பலவற்றை செய்திருக்கும் மிதாலி ராஜின் குறிப்பிடத்தக்க சாதனைகள் இங்கே...
*மிதாலி ராஜ் இந்திய அணிக்கு அறிமுகமாமும் போது அவருக்கு 17 வயது மட்டுமே ஆகியிருந்தது. அறிமுகமாகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்து சாதனையுடனேயே தனது கரியரை தொடங்கினார்.
*19 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்திருந்தார். இங்கிலாந்து எதிராக இங்கிலாந்திலேயே வைத்து செய்த தரமான சம்பவம் இது. மிதாலி ராஜ் அடித்த 214 ரன்களே இன்று வரை மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.
*22 வயதிலேயே இந்திய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பும் மிதாலி ராஜுக்கு கிடைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளமையான மூன்றாவது கேப்டன் எனும் பெருமையை மிதாலி பெற்றார்.
*பிசிசிஐ யின் கீழ் பெண்கள் கிரிக்கெட் 2006 இல்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிதாலி ராஜ் அதற்கு முன்பிருந்தே இந்திய அணிக்கு ஆடி வருகிறார். இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆக, பெண்களை கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் பிசிசிஐ விட மிதாலி ராஜ் மூத்தவர்.
*ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை எனும் பெருமையை சமீபத்தில் பெற்றார். உலகளவில் மற்ற வீராங்கனைகள் யாரும் இன்னமும் 6000 ரன்களை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் 10000 ரன்களையும் உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து 20000 ரன்களையும் கடந்த முதல் வீராங்கனையாக மலைப்பை ஏற்படுத்துகிறார்.
*ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையும் மிதாலியின் வசமே இருக்கிறது.
*180 க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உலகளவில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த வீராங்கனை எனும் சாதனையையும் செய்திருக்கிறார்.
*இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டு முறை இந்திய அணியை இறுதிப்போட்டி வரை தகுதிப்பெற வைத்திருக்கிறார்.
*2003 ஆம் ஆண்டிலேயே அர்ஜுனா விருதை பெற்றிருந்தார். 2015 இல் பத்மஸ்ரீ விருதையும் சமீபத்தில் கேல் ரத்னா விருதையும் பெற்றிருந்தார்.
*இந்திய அணிக்காக 22 வருடங்களாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். இந்திய அணி ஒட்டுமொத்தமாக 263 வது ஒருநாள் போட்டியில் ஆடிய போது மிதாலி ராஜ் தனது 200 வது போட்டியில் ஆடிக்கொண்டிருந்தார். இந்த மாதிரியான ரெக்கார்டுகளையெல்லாம் இனிமேல் யாராலும் உடைக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.