இவரு கிரிக்கெட்டின் ரங்கன் வாத்தியார்.. டிராவிட் செய்த சம்பவங்கள்.. தொடங்கியது அடுத்த பயணம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ராகுல் திராவிட்டின் பதவிக்காலம் வரும் நியூசிலாந்து தொடர் முதல் தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு உள்ளது. ஏற்கெனவே இருக்கும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் உலகில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்த சில முக்கியமான விஷயங்கள் என்னென்ன?
யு-19 அணியின் பயிற்சியாளர்:
முதலில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். அந்தத் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சிறப்பாக பட்டை தீட்டினார். இந்தத் தொடரில் அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகளை இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும் அந்தத் தொடரில் விளையாடிய இந்திய வீரர்கள் ராகுல் டிராவிட்டின் அறிவுரை ஏற்று நல்ல வீரர்களாக உருவெடுத்தனர்.
இந்திய ஏ அணியின் பயிற்சியாளர்:
இந்திய யு-19 பயிற்சியாளர் பணிக்கு பிறகு இந்திய ஏ அணிக்கு 2016ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பல வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயிற்சியாளராக சென்றார். அதில் குறிப்பாக 2018-19ஆம் ஆண்டு இந்திய ஏ அணி இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த ராகுல் டிராவிட்டின் அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் பின்பு இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அந்தத் தொடர்களில் பேட்ஸ்மேன்களுக்கு ராகுல் டிராவிட்டின் அனுபவம் மிகவும் கை கொடுத்தது.
தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குநர்:
இந்திய ஏ அணியுடன் சிறப்பாக செயல்பட்ட பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இயக்குநராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் பதவியில் ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்றார். அந்த மையத்தில் இந்திய வீரர்கள் பலர் பயிற்சியில் ஈடுபட்ட போது ராகுல் டிராவிட் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மேலும் காயத்திற்கு பிறகு அங்கு வந்து பயிற்சி மேற்கொண்ட வீரர்களிடம் ராகுல் டிராவிட் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதன்விளைவு இந்திய அணிக்கு பல வீரர்கள் நல்ல முறையில் விளையாடி வந்தனர்.
இலங்கை தொடருக்கான பயிற்சியாளர்:
2021ஆம் ஆண்டு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்தது. வழக்கமான இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க சென்றது. இதனால் ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்தது. அந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார். அதில் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது. எனினும் டி20 தொடரில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்த தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கை அளித்தனர். அதற்கு ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்தச் சூழலில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை எப்போதும் உருவாக்கி வரும் தற்போது சீனியர் அணியில் இருக்கும் வீரர்களையும் பட்டை தீட்டி சிறப்பாக செதுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள டெஸ்ட் தொடர்களில் இந்திய வீரர்கள் பேட்டிங்கை டிராவிட் மாற்றுவார் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க:பயிற்சியாளர் பதவி எனக்கு கிடைத்த கௌரவம்... - மனம் திறந்த டிராவிட்