Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை - 8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் தோற்றதால், இந்தியா அரையிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது.
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் 8 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது.
மகளிர் டி20 உலகக் கோப்பை:
மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என, அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, அவர்களின் பரம எதிரியாக கருதப்படும் இந்தியர்களும் பிரார்த்தனை செய்தனர். காரணம், அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே, இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தியது. இதனால், பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது மட்டுமின்றி, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பும் சுக்கு நூறாக உடைந்தது.
8 கேட்ச்களை தவறவிட்ட பாகிஸ்தான்:
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முன்னதாக, இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீராங்கனைகள் 8 கேட்ச்கள் மற்றும் இரண்டு ரன் - அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். குறிப்பாக, பாகிஸ்தான் வீராங்கனை ஃபாதிமா சனா மட்டுமே 4 கேட்ச்களை கைநழுவவிட்டார். அதில் பெரும்பாலனவை மிக எளிதாக கைகளில் வந்து விழுந்த கேட்ச் வாய்ப்புகளாகும். அதன்படி, 4.2, 5.2, 7.3, 15.5, 17.2, 19.1, 19.3 மற்றும் 19.5 ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீராங்கனைகள் நழுவவிட்டனர்.
Pakistan dropped 8 catches against New Zealand. 🤯pic.twitter.com/kW53N2A31t
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2024
பேட்டிங்கில் வரலாற்றில் மோசமான சாதனை
ஃபீல்டிங்கில் தான் மோசமாக செயல்பட்டது என கருதினால் பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது. 111 ரன்கள் என்பது எளிய இலக்கு என்பதை கூட பொருட்படுத்தாமல், அநாவசியமான ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்கங்களை எட்ட, 4 பேர் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகினர். இதனால், 11.4 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் அணி, வெறும் 56 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம், மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதனிடையே, 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது.
இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் மகளிர் அணி முன்னாள் கேப்டன் சனா மிர், “எனது 15 ஆண்டுகால கிரிக்கெட்டில் இப்படி ஒன்றை பார்த்ததில்லை. தங்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் அணியால் மகளிர் கிரிக்கெட்டில் வாழ முடியாது” என கூறினார். இதனிடையே, இந்திய அணியை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், பாகிஸ்தான் திட்டமிட்டே இப்படி படுதோல்வி அடைந்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.