ENG vs NED : நல்லா இருந்த நெதர்லாந்தும்..! நாசமாக்கிய இங்கிலாந்தின் நாலு பேரும்..! என்னா அடி....!
நெதர்லாந்து அணிக்கு எதிராக டேவிட்மலான், பிலிப்சால்ட், ஜோஸ் பட்லர் அதிரடி சதங்கள் மற்றும் லிவிங்ஸ்டன் அதிரடியால் இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்தது.
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அந்த நாட்டில் உள்ள ஆம்ஸ்டீல்வீன் நகரில் நடைபெற்ற போட்டியில் 498 ரன்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
இந்த போட்டியில் நெதர்லாந்து பந்துவீச்சை பிலிப் சால்ட், டேவிட் மலான், ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன் நொறுக்கித்தள்ளினர். தொடக்க வீரர் ராய் 1 ரன்னில் ஆட்டமிழந்த பிறகு மற்றொரு தொடக்க வீரர் பிலிப்சால்ட் 93 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 3 சிக்ஸருடன் 122 ரன்களை விளாசினார். 25 வயதான பிலிப் சால்டிற்கு இதுதான் முதல் சதம் ஆகும்.
அவருக்கு பிறகு மற்றொரு அதிரடி வீரரான டேவிட் மலான் நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 34 வயதான டேவிட் மலானும் 122 ரன்களை விளாசினார். 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள டேவிட் மலானுக்கு இதுவே முதல் சதம் ஆகும். இங்கிலாந்து அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த மூன்றாவது இங்கிலாந்து இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்கிய இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆட்டத்தை ஜெட் வேகத்திற்கு கொண்டு சென்றார்.
களமிறங்கியது முதல் பந்துகளை எல்லைக்கோட்டிற்கு அனுப்புவதிலே குறியாக இருந்தார். குறிப்பாக, பவுண்டரிகளை காட்டிலும் சிக்ஸர்களாக விளாசி அசத்திக்கொண்டிருந்தார். அவர் 70 பந்துகளில் 7 பவுண்டரி 14 சிக்ஸர்களை விளாசி 162 ரன்களை குவித்தார். சிக்ஸர்களில் 84 ரன்களையும், பவுண்டரியில் 28 ரன்கள் என பவுண்டரி, சிக்ஸர்களில் மட்டும் 112 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 407 ரன்களை எட்டியிருந்தபோது லியாம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். ஏற்கனவே நொந்து போயிருந்த நெதர்லாந்து வீரர்களை லிவிங்ஸ்டன் மேலும் மறக்க முடியாத அளவிற்கு நோகடித்தார் என்றே கூறலாம். அவர் 22 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் என்று 66 ரன்களை குவித்தார். அவரது கடைசிகட்ட அதிரடியாலே இங்கிலாந்து அணியால் புதிய உலகசாதனை படைக்க முடிந்தது என்று கூறலாம்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக 26 சிக்ஸர்களையும், 36 பவுண்டரிகளையும் விளாசி அசத்தியுள்ளது. அதாவது சிக்ஸர் மற்றும் பவுண்டரி மூலமாக 300 ரன்களை விளாசியுள்ளனர். நெதர்லாந்து அணியின் போய்ஸ்வெய்ன் 10 ஓவர்கள் வீசி 108 ரன்களை வாரி வழங்கினார். ஸ்னேடர் 10 ஓவர்களில் 99 ரன்களை வாரி வழங்கினார். ஆர்யன் தத் என்ற வீரர் மட்டும் 6 ஓவர்களில் 55 ரன்களை வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்