Fastest 100 Wickets: அதிவேகமாக 100 விக்கெட்டுகள்! 21 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீராங்கனை!
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டன் படைத்துள்ளார்.
ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு நிகராக தற்போது மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விளையாடி வருகிறது.
அதிவேகமாக 100 விக்கெட்டுகள்:
செம்ஸ்போர்ட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நட்ஸ்கிவர் ப்ரூன்ட் அதிரடி சதத்தால் ( இறுதிவரை ஆட்டமிழக்காமல் 124 ரன்கள்) 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 303 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 29.1 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால், இங்கிலாந்து அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறப்பாக வீசிய சோபி எக்லெஸ்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். வெறும் 4 ஓவர்களில் 1 ஓவரை மெய்டனாக்கி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோபி எக்லெஸ்டன் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் படைத்தார். சோபி இந்த சாதனையை 64 போட்டிகளில் 63 இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மிகவும் சிறப்பான தருணம்:
இதற்கு முன்பு இந்த சாதனையை ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் தன் வசம் வைத்திருந்தார். அவர் 2003ம் ஆண்டு 64 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். 21 ஆண்டுகளுக்கு பிறகு கேத்ரினின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ள எக்லெஸ்டன், “எனக்கு நம்பர்கள் ஒன்றும் சிறப்பாக இல்லை. புள்ளிவிவரங்களும் ஒன்றும் நன்றாக இல்லை. ஆனாலும், இது அற்புதமானது இதைத் தொடருவேன் என்று நம்புகிறேன். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். அதனால், மகிழ்ச்சி. நான் சிறந்த அணியுடன் ஆடுகிறேன்” என்று கூறினார்.
சோபி எக்லெஸ்டன் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளையும், 64 ஒருநாள் போட்டிகளில் ஆடி 101 விக்கெட்டுகளையும், 81 டி20 போட்டிகளில் ஆடி 118 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் பேட்டிங் செய்த பௌசியர் 34 ரன்களும், டேனவியல்லி வியாட் 44 ரன்களும், ஆலிஸ் 39 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முனீபா அலி 47 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆலியா ரியாஸ் 36 ரன்கள் எடுத்தார். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள்.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று மொத்த தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
மேலும் படிக்க: Gautam Gambhir: ”விராட் கோலியுடனான ஃப்ரெண்ட்ஷிப்.. மசாலா போட தேவையில்ல”: கவுதம் கம்பீர் பளிச்
மேலும் படிக்க: T20 World Cup 2024: உலகக் கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளின் முழுவிவரம்.. எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்?