England Head Coach: ஆஷஸில் வாங்கிய அடி.. இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா ரவி சாஸ்திரி?
England New Head Coach:ஆஷஸ் தொடர் தோல்வி எதிரொலி காரணமாக இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இந்த தொடர் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொடர் ஆகும்.
தோல்விப் பாதையில் இங்கிலாந்து:
தற்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் இங்கிலாந்து அணி மொத்தம் உள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டில் நடந்த முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சிய நிலையில், தொடரை முழுவதும் இங்கிலாந்து இழந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் இந்த தோல்விக்கு அணி வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமும் முக்கிய காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். அவரின் யுத்தி துளியளவும் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடவில்லை. ஏனென்றால், ஆஸ்திரேலிய அன்று முதல் இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்கேற்ப வகையிலே மைதானத்தை பராமரித்து வருகின்றனர்.
பயிற்சியாளர் ஆகிறாரா ரவி சாஸ்திரி?
இதன் காரணமாக மெக்கல்லமிற்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி முதன்மையான இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் சாதனை மிகப்பெரியது ஆகும். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலே வைத்து 2 முறை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய பெருமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு உண்டு. அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி 2018 - 19 மற்றும் 2020 -21 ம் வருடத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சாதனைகள் என்னென்ன?
ஆஸ்திரேலிய அணியை மட்டுமின்றி மற்ற அணிகளுக்கும் ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் இந்திய அணி சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி பெற்றது. 76 ஒருநாள் போட்டிகளில் 51 போட்டிகளில் வெற்றி பெற்றது. 65 டி20 போட்டிகளில் 42 போட்டிகளில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளராக ரவி சாஸ்திரி திகழ்ந்தார். கோலியின் கேப்டன்சியும் அதற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. இதனால், அவர் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றால் இங்கிலாந்து அணியை புதுப்பொலிவு பெற வைக்கலாம் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருதுகின்றனர்.
மெக்கல்லமின் பயிற்சி காலம் வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கும் மற்றொரு ஆஷஸ் தொடரும் வருகிறது. தற்போது 63 வயதாகிய ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியிடம் இருந்து பயிற்சியாளர் பொறு்பபு கிடைத்தால் அதை ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கிரிக்கெட் வீரராக எப்படி?
ரவி சாஸ்திரி 1981ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடியுள்ளார். 80 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 11 சதங்கள், 1 இரட்டை சதம், 12 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 830 ரன்கள் எடுத்துள்ளார். 151 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
150 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 18 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 108 ரன்கள் எடுத்துள்ளார். 129 விக்கெட்டும் எடுத்துள்ளார். ரவி சாஸ்திரி மிகச்சிறந்த வர்ணனையாளர் என்பதில் கிரிக்கெட் பயிற்சியாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார்.




















