(Source: ECI | ABP NEWS)
Patuadi Trophy: ரைட்ரா, இனி பட்டோடி கோப்பை கிடையாது - IND - ENG சீரிஸ், சச்சின் - ஆண்டர்சன் ரசிகர்கள் ஷாக்
Patuadi Trophy IND - ENG Series: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பெயர், சச்சின் - ஆண்டர்சன் கோப்பை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Patuadi Trophy IND - ENG Series: : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், முன்பு படோடி கோப்பை என குறிப்பிடப்பட்டு வந்தது.
இந்தியா - இங்கிலாந்து தொடர் பெயர் மாற்றம்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தொடரை ஒட்டி, இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் சம்மேளனங்கள் இணைந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த தொடர் இனி ஆண்டர்சன் - சச்சின் கோப்பை என அடையாளப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த ஜாம்பவான்களை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி தொடங்க உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன் - சச்சின் கோப்பை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவன்கள்:
சச்சின் டெண்டுல்கர்: 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 51 சதங்கள் உட்பட 15 ஆயிரத்து 921 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் சச்சின் குவித்துள்ளார். 68 அரைசதங்கள் அடங்கிய கேரியரில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 248 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்: மறுபுறம் இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆண்டர்சன், 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை இவரையே சேரும். ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
இருவரும் 14 போட்டிகளில் எதிர்கொண்டுள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கரை 9 முறை ஆண்டர்சன் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இது வேறு எந்தவொரு பந்துவீச்சாளரை காட்டிலும் மிகவும் அதிகமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
பட்டோடி கோப்பை வரலாறு:
முன்னதாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என குறிப்பிடப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, கடந்த 2007ம் ஆண்டு இந்த கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெறும் தொடருக்கு இந்த கோப்பை வழங்கப்பட்டது. இஃப்திகார் அலிகான் பட்டோடி மற்றும் மன்சூர் அலி கான் பட்டோடி எனப்படும் டைகர் பட்டோடி என இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்களை வழங்கிய பட்டோடி குடும்பத்தை கவுரவிக்கும் விதமாகவே இந்த கோப்பைக்கு பட்டோடி என பெயர் சூட்டப்பட்டது. டைகர் பட்டோடி, 21 வயதிலேயே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். வெளிநாட்டு மண்ணில் (நியூசிலாந்து) இந்திய பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இவரது தலைமையின் கீழே ஆகும். 1964ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரையும் வென்று, இந்திய அணியின் முதல் வெளிநாட்டு தொடர் வெற்றியையும் உறுதி செய்தார். இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டோடி கோப்பையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
- முதல் டெஸ்ட் - ஜுன் 20-24, ஹெடிங்கிலி, லீட்ஸ்
- 2வது டெஸ்ட் - ஜுலை 2-6, எட்க்பஸ்டன், பிரிமிங்ஹாம்
- 3வது டெஸ்ட் - ஜுலை 10-14, லார்ட்ஸ், லண்டன்
- 4வது டெஸ்ட் - ஜுலை 23-27, ஓல்ட் ட்ராஃப்பர்ட், மான்செஸ்டர்
- 5வது டெஸ்ட் - ஜுலை 21 - ஆக.4, தி ஓவல், லண்டன்




















