Eng Vs Pak Test: நொந்துபோன பாகிஸ்தான் ரசிகர்கள், பொட்டலம் கட்டிய இங்கிலாந்து - இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி
Eng Vs Pak Test: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
Eng Vs Pak Test: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என முன்னிலை வகிக்கிறது. உள்ளூர் மண்ணில் பாகிஸ்தான் அணி பெற்று வரும் அடுத்தடுத்த படுதோல்விகளால், அந்நாட்டு ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.
இங்கிலாந்து Vs பாகிஸ்தான்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில் முல்தான் சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்துல்லா ஷஃபிக், ஷான் மசூத் மற்றும் சல்மான் அலி அகா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் சொற்ப ரன்களிலும், ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை சேர்த்து ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து சார்பில், அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வட்டியும், அசலுமாக திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து:
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஒல்லி போப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அவர்களை தொடர்ந்து வந்த ஜோ ரூட், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்றொரு தொடக்க வீரரான கிராவ்லி 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த பென் டக்கெட்டும் தன் பங்கிற்கு 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றுக் ஹாரி ப்ரூக், பாகிஸ்தான் பந்துவீச்சை நையப்புடைத்தனர். இந்த கூட்டணியை பிரிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் பெரும் தோல்விகளையே சந்தித்தன.
ஹார் ப்ரூக், ஜோ ரூட் அசத்தல்:
ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் இரட்டை சதம் கடந்து 262 ரன்களை சேர்த்தார். மறுபுறம் அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக் முச்சதம் விளாசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உள்ள பல சாதனைகளை முறியடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 823 ரன்களை சேர்த்து இருந்தபோது, டிக்ளேர் செய்தது.
ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான்:
தொடர்ந்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள், வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த சல்மான் அலி அகா 63 ரன்களையும், ஆமிர் ஜமால் 55 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்த பின் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பரிதாபமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.
நொந்துபோன பாகிஸ்தான் ரசிகர்கள்:
கடந்த 2022ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணி இதுவரை உள்நாட்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஏழு போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், நான்கு போட்டிகளை டிரா செய்துள்ளது. இதன் மூலம், இந்த காலகட்டத்தில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒரே அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரில் கூட, பாகிஸ்தான் 2- என படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்கள் நொந்து போயுள்ளார். நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சொதப்புவது, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.