England ODI Record: எட்டே ஓவர்தான்.. அயர்லாந்தை அலறவிட்ட இங்கிலாந்து; 100 ரன்கள் குவித்து சாதனை
England ODI Record: நியூசிலாந்து அணி கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 6.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததே இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
England ODI Record: அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்னரே கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பிரிஷ்டால் கவுண்டி மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை பிலிப் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அயர்லாந்து அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தனர். போட்டியின் முதல் ஓவரை எதிர்கொண்ட பிலிப் சால்ட் முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கும் நான்காவது பந்தை சிக்ஸருக்கும் அனுப்பினார். ஐந்தாவது பந்து வைடாக வீச, அடுத்த இரண்டு பந்தில் மேற்கொண்டு ரன்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் முதல் ஓவரில் இங்கிலாந்து அணி 19 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 2வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே அயர்லாந்து அணி விட்டுக்கொடுத்தது. மூன்றாவது ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் உட்பட் மொத்தம் 23 ரன்கள் சேர்க்கப்பட்டதால் இங்கிலாந்து அணி இந்த ஓவரின் முடிவில் 60 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன் பின்னர் 5வது ஓவரில் இங்கிலாந்து அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 6வது ஓவரில் 18 ரன்களும் 7வது ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்து 3 ரன்களும் மட்டும் எடுத்தது. இந்த ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 87 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 8வது ஓவரில் இங்கிலாந்து அணி 13 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணியின் மொத்த ரன்கள் 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100ஐ எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் படை 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் அணியின் சிறந்த சாதனையை படைத்துள்ளது. ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணி கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 6.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்ததே முதல் இடத்தில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
4️⃣4️⃣4️⃣6️⃣
— England Cricket (@englandcricket) September 26, 2023
Phil Salt's not hanging around, hitting 18 off the first four balls!#ENGvIRE #EnglandCricket pic.twitter.com/H1X5hOeEsj
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 31 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் சேர்த்து மிகவும் வலுவாக உள்ள நிலையில், கனமழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் இந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 107 ரன்களுடன் களத்தில் இருந்தார். அயர்லாந்து அணி சார்பில் கிராய்ஹ் யாங் 7 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.