WTC Final: இந்திய அணியை விட ஐபிஎல் ஆடுவது முக்கியமா..? தாமதமாக வந்த இந்திய வீரர்களை சாடும் ரவி சாஸ்திரி!
இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு ஐபிஎல் போட்டியில் நேரத்தை செலவிட்டதுதான் காரணம் என்று கருதிய ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களின் ஐபிஎல் ஒப்பந்தத்தில் பிசிசிஐ ஒரு விதியை அமைக்க வேண்டும் என்றார்.
ஐபிஎல் முக்கியமா, தேசத்திற்காக அடும் கிரிக்கெட் முக்கியமா என்பதை வீரர்கள் முதலில் முடிவெடுத்துவிட்டு களமிறங்க வேண்டும் என்று கேட்டு முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவின் மோசமான தொடக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் மூன்று நாட்களில் இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சுமாராகவே செயல்பட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்த நிலையில், நட்சத்திரங்கள் நிறைந்த இந்திய வீரர்கள் போராடி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்த சோகம் இந்திய ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது. அஜிங்க்யா ரஹானே (89), ஷர்துல் தாக்கூர் (51), ரவீந்திர ஜடேஜா (48) ஆகியோரைத் தவிர மற்ற இந்திய நட்சத்திரங்கள் பெரிய ரன்களை குவிக்கத் தவறிவிட்டனர்.
ஐபிஎல் தான் காரணமா?
இந்திய பந்துவீச்சாளர்களும் முதல் நாள் ஏமாற்றம் அளித்தனர், அதில் அவர்கள் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தனர். மறுபுறம், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் முக்கிய மோதலுக்கு ஆஸ்திரேலிய பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் முன்னரே வந்து நன்கு தயாராகி வந்தனர். இந்நிலையில், இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு ஐபிஎல் போட்டியில் நேரத்தை செலவிட்டதுதான் காரணம் என்று கருதிய ரவி சாஸ்திரி, இந்திய வீரர்களின் ஐபிஎல் ஒப்பந்தத்தில் பிசிசிஐ ஒரு விதியை அமைக்க வேண்டும் என்றார்.
எது முக்கியம் என்று முடிவு செய்யுங்கள்
"உங்கள் முன்னுரிமைகளை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும், இல்லையா? முன்னுரிமை எது? இந்திய அணியா? அல்லது ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்று சொன்னால், இதனை (WTC இறுதிபோட்டியை) மறந்துவிடுங்கள். இது முக்கியமானது என்றால், ஐபிஎல் இல் இருந்து விலகி உடனடியாக இங்கு வாருங்கள். ஐபிஎல் ஒப்பந்தத்தில், இந்தியாவின் நலன் கருதி ஐபிஎல்லில் இருந்து ஒரு வீரர் தேவைப்பட்டால், அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்று ஒரு விதியை உருவாக்க வேண்டும், ”என்று ரவி சாஸ்திரி ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
புதிய விதி வேண்டும்
இந்திய வீரர்களுக்கு இந்த விதி மிகவும் முக்கியமானது என்று ரவி சாஸ்திரி கூறினார், அந்த விதிகளின் அடிப்படையில் வீரர்கள் மீது முதலீடு செய்வதால் அணி உரிமையாளருக்கும் நியாயம் கிடைக்கும். “முதலில், இப்படி ஒரு விதியை வைத்து, அவர்கள் பாதியில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று குறிப்பு கொடுத்து, அதன்பிறகு அவர்கள் அந்த வீரர் மீது எவ்வளவு முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்யும்படி உரிமையாளர்களிடம் கேளுங்கள். அது மிகவும் முக்கியமானது. நீங்கள் (பிசிசிஐ) விளையாட்டின் பாதுகாவலர். நாட்டில் நடக்கும் கிரிக்கெட்டை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
கோப்பையை வெல்லுமா இந்தியா?
இந்த நிலையில் இந்திய அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து இருந்தது. விராட் கோலி, ரஹானே ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்று 3 மணிக்கு தொடங்கவிருக்கும் கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டத்தில், கையில் 7 விக்கெட் இருப்புடன் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்குகிறது இந்திய அணி. இந்த போட்டியை வெல்ல கோலி - ரஹானே ஜோடியின் நிலையான ஆட்டம் மிகவும் இன்றியையாததாக இருக்கும் என்று தெரிகிறது.