David Warner: டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
David Warner: டேவிட் வார்னர் கேப்டன் ஆவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
David Warner: பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிய்ன் கேப்டனான டேவிட் வார்னர் தகுதி பெற்றுள்ளார்.
டேவிட் வார்னர் மீதான தடை நீக்கம்:
டேவிட் வார்னர் கேப்டன் ஆவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. அதாவது, இப்போது அவர் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியின் கேப்டனாக தகுதி பெற்றுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் வார்னர் தனது வழக்கை மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவிடம் முன்வைத்தார், அதில் 37 வயதான அவர் தடையை உடனடியாக நீக்குவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஆக வார்னருக்கு அனுமதி:
விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தடை விதிக்கப்பட்டதிலிருந்து வார்னரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அவர் கணிசமான மாற்றத்தை எதிர்கொண்டதாக தெரிகிறது. உதாரணமாக அவர் போட்டிகளின்போது ஸ்லெட்ஜ் செய்யவோ அல்லது எதிர் அணியைத் தூண்டிவிடவோ முயற்சிக்கவில்லை. வார்னர் 2018 இல் நடந்ததைப் போன்ற எந்த நடத்தையிலும் ஈடுபட மாட்டார் என்பதில் மறுஆய்வுக் குழு திருப்தி அடைந்துள்ளது. இதன் விளைவாக அவர் இனி கேப்டன் பதவி பெற தகுதி பெற்றுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
கேப்டவுனில் பந்தை சேதப்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் துணைக் கேப்டனாக இருந்த வார்னர், இந்தத் திட்டத்தைத் தூண்டியவர் என அடையாளம் காணப்பட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருட தடையுடன் கேப்டன் பதவி பெற தடை இல்லை என வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது மற்றும் 12 மாதங்கள் கேப்டன் பதவியில் இருந்து தடை விதிக்கப்பட்டது, கேமரூன் பான்கிராப்ட் 9 மாதங்கள் தடை செய்யப்பட்டார்.
தலைமைத் தடைக்கு எதிராக வார்னர் மேல்முறையீடு செய்திருந்தார், ஆனால் 2022 இல் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், மீண்டும் அவர் செய்த மேல்முறையீட்டில் அவர் மீது விதிக்கப்பட்டு இருந்த கேப்டன்சிக்கான வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.
அபாரமான கிரிக்கெட் வாழ்க்கை:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவராக டேவிட் வார்னர் திகழ்கிறார். பல முறியடிக்க முடியாத சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்ற அவர், 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக கடைசியாக விளையாடினார். தற்போது அவர் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
- 112 டெஸ்ட் போட்டிகளில் 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 8786 ரன்களை சேர்த்துள்ளார்
- 161 ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்களை விளாசியுள்ளார்
- 110 டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 28 அரைசதங்கள் உட்பட 3,277 ரன்களை விளாசியுள்ளார்