Dasun Shanaka: கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ஷனகா..? இலங்கை அணியின் புது கேப்டன் யார்..? வெளியான தகவல்..!
இலங்கை அணியின் கேப்டனாக இருந்து வரும் தசுன் ஷனகா, உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்த நிலையில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் உலகக் கோப்பைக்கான தங்கள் அணியை அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், இலங்கை அணியின் கேப்டனாக இருந்து வரும் தசுன் ஷனகா, உலகக் கோப்பைக்கு முன்னதாக தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, உலகக் கோப்பைக்கு முன்னதாக தசுன் ஷனகாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷனகாவுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.
ஒரு தரப்பு தசுன் ஷனகாவுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் தனஞ்சய் டி சில்வா அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.
கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ஷனகா..?
2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பதவி விலகுவார் என்ற செய்தி வதந்தி என்று இலங்கையின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023 உலகக் கோப்பை வரை ஷனகாவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அணியின் பல முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளனர், இதில் வனிந்து ஹசரங்கவின் பெயரும் அடங்கும். உலகக் கோப்பைக்கான இறுதி அணியை சமர்ப்பிக்க செப்டம்பர் 28 கடைசி நாளாகும்.
இலங்கை அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் தசுன் ஷனகா முக்கிய பங்காற்றி வருகிறார். இவரது தலைமையில் கடந்த ஆண்டு ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது. இந்தாண்டு தொடர்ந்து 13 ஒருநாள் போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றது.
உலகக் கோப்பையில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை அக்டோபர் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது.
மோசமான பார்மில் தசுன் ஷனகா:
தசுன் ஷனகா ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் சதம் அடித்தார். அதன்பிறகு, 17 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேபோல், கடந்த 6 இன்னிங்ஸ்களில் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2022 முதல் 33 போட்டிகளில் வெறும் 489 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து தசுன் ஷனகா இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது பேசிய அவர், “ இலங்கை அணியில் ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இறுதிப் போட்டிக்கு வந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் இருந்த நிலைமைக்கு இது ஒரு நல்ல அறிகுறி. எங்கள் ரசிகர்கள் கொடுத்த அளவிளாத அன்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களை ஏமாற்றியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். சிறப்பாக செயல்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.