Natarajan Cricket Ground: 'கையிலே ஆகாசம்.. கொண்டுவந்த உன் பாசம்..’ : இளம் வீரர்களுக்கான நடராஜனின் கிரிக்கெட் மைதானம் திறப்பு..
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேலத்தில் அமைத்துள்ள புதிய மைதானத்தை, தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேலத்தில் அமைத்துள்ள புதிய மைதானத்தை, தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
நடராஜன் கிரிக்கெட் அகாடமி:
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் சேலம் சின்னப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களின் திறமைகளை வெளிகொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், நடராஜன் கிரிக்கெட் அகாடமி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இருக்கும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிகொண்டு வருவதற்காக இந்த அமைப்பின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய கிரிக்கெட் மைதானம்:
இந்த நிலையில் சேலம் சின்னப்பம்பட்டி பகுதியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வீரர் நடராஜன் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கிரிக்கெட் மைதானம் தயாரான நிலையில் இன்றைய தினம், சக இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் நேரில் வந்து மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் ஆடிய நிலையில் நடராஜன் வந்து வீசினார். நான்கரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், சேலம் சின்னப்பம்பட்டியை சுற்றியுள்ள சிறிய குக் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இலவசமாக கிரிக்கெட் பயிற்சி பெறும் வகையில் நடராஜன் இந்த மைதானத்தை அமைத்துள்ளார்.
விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்:
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி ஆகியோருடன், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நடராஜன் விளையாடி வரும் திருச்சி பைசி அணியை சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர். அதோடு, யோகி பாபு மற்றும் புகழ் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்றனர். இதையோட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்திய அணியில் நடராஜன்:
டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், இந்திய அணிக்காக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம், சர்வதேச போட்டிகளில் நடராஜன் முதன்முறையாக களமிறங்கினார். தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் களம் கண்டார். அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 2 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி-20 போட்டிகளில் நடராஜன் விளையாடியுள்ளார். இதனிடையே, காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரம் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக நடராஜன் தொடர்ந்து சிறப்பாக வளையாடி வருகிறார். குறிப்பாக டெத் ஓவர்களில் எதிரணிக்கு கடும் நெருக்கடி அளித்து வருகிறார்.