Chris Gayle: ரோகித் - கோலி டி20 உலகக் கோப்பை விளையாடனும்.. காரணம் இதுதான் - கிறிஸ் கெய்ல் ஓபன் டாக்
இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்குள் தற்போது கொஞ்சம் புகைச்சலாக உள்ள விஷயம் உலக கிரிக்கெட் அரங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது இந்திய அணி ஐசிசி நடத்திய ஒருநாள் உலகக் கோப்பை 2023-இல் இறுதிப் போட்டிவரை தோல்வியே சந்திக்காமல் முன்னேறி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒரு முக்கிய முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அல்லது மூத்த வீரர்கள் தாங்களாகவே அந்த முடிவை நோக்கி நகரவேண்டும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதாவது இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறி வந்தனர். இது மட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராவதற்கு இந்த முடிவினை இவர்களாகவே விரைவில் எடுக்க வேண்டும் என செய்திகள் வெளியானது.
ஆனால் இது குறித்து பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்காக எவ்வளவோ செய்துள்ளனர். அதே நேரத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் அவர்கள் விளையாடலாமா அல்லது ஓய்வினை அறிவிக்கலாமா என்பதை அவர்களாவே முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துவிட்டதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ள கருத்து சர்வதேச கிரிக்கெட் தளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது
”2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அவர்களாகவே முடிவு எடுக்க ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தகுதியானவர்கள்.ரோஹித்தும் கோலியும் பரபரப்பான 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பேட்டிங் மூலம் அதிரடி காட்டி இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தனர். இது இந்தியாவை இறுதிப் போட்டிக்கு முன்னேற்ற உதவியது. நடந்து முடிந்த உலகக்கோப்பையில் கோலி 765 ரன்களுடன் உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்தவராக இருந்தார். ரோஹித் 54.27 சராசரியுடன் 597 ரன்கள் எடுத்தது மட்டும் இல்லாமல் 125 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பையில் கலக்கிய இவர்கள் இருவரும், ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி தோல்விக்குப் பின்னர் இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. 36 வயதினை ரோஹித் மற்றும் 35 வயதினை கோலி எட்டவிருக்கும் நிலையில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான விவாதமாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோகித் மற்றும் கோலி தங்களுடைய முடிவினை தாங்களே தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாட விரும்பினால், அதனை அவர்களே அறிவிக்க வேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை விளாசுவதென்பது நம்பமுடியாதது. சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு பழம்பெரும் வீரரின் சாதனையை முறியடித்தது மிகவும் அற்புதமானது. மேலும் அந்த சாதனையை யாரும் நெருங்குதற்கான வாய்ப்பே இல்லை. ரோகித் சர்மாவைப் பொறுத்தவரை எனக்கு அவரது ஆக்ரோஷமான பேட்டிங் பிடிக்கும். பந்துவீச்சாளர்களை அழிக்க பேட்டர்கள் வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ரோஹித் ஷர்மா அவர்களில் ஒருவர்" என்று கெய்ல் கூறியுள்ளார்.