Pujara Test Century: 3 ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா சாதனை..! அதிவேக சதம் விளாசி அசத்தல்..!
Cheteshwar Pujara Test Century: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து விளாசி அசத்தியுள்ளார்.
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது இன்னிங்சில் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவிற்கு புஜாரா – சுப்மன்கில் ஜோடி பக்கபலமாக அமைந்தது.
இந்திய தொடக்க வீரர் சுப்மன்கில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடனும், அதிரடியாக ஆடி வந்த அபார சதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா தன்னுடைய சதத்தை விளாசினார். 130 பந்துகளில் புஜாரா இந்த சதத்தை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா விளாசும் 19வது சதம் இதுவாகும்.
இந்திய அணியில் விராட்கோலி மீது சதமடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வந்தது போலவே, புஜாரா மீதும் சதமடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வந்தே இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரராக உலா வரும் புஜாரா கடந்த இன்னிங்சிலே சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், முதல் இன்னிங்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால், இந்த இன்னிங்சில் தொடக்கம் முதலே புஜாரா அதிரடியாகவே ஆடினார். இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றது முதல் புஜாராவின் பேட்டிங்கில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆமை வேக ஆட்டக்காரர், தடுப்புச்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் புஜாரா தனது ஆட்டத்தை அதிரடி பாணிக்கு மாற்றியுள்ளார். கடந்த இன்னிங்சில் பொறுமையாக ஆடினாலும் இந்த இன்னிங்சில் தொடக்கம் முதலே ரன்களை துரிதமாக சேர்க்கத் தொடங்கினார்.
ஒரு முனையில் சுப்மன்கில் அதிரடியாக ரன்களை சேர்க்க புஜாரா அழுத்தமில்லாமல் ஆடினார். இதனால், அவர் 130 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். புஜாராவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரது அதிவேக சதம் இதுவாகும். புஜாரா கடைசியாக டெஸ்ட் போட்டியில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசியிருந்தார்.
அதன்பின்னர், 29 டெஸ்ட் போட்டிகளில் 51 இன்னிங்சில் அதாவது 47 மாதங்களாக எந்த சதமும் அடிக்காமல் இருந்துள்ளார். இன்று தன்னுடைய 52வது இன்னிங்சில் சதமடித்து அசத்தியுள்ளார். புஜாரா இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 ஆயிரத்து 984 ரன்களை குவித்துள்ளார். 3 இரட்டை சதங்கள், 19 சதங்கள், 34 அரைசதங்கள் விளாசியுள்ள புஜாரா இந்திய அணிக்காக பல இக்கட்டான நேரங்களில் ஆபத்பாந்தவனாக விளங்கியுள்ளார்.