Watch Video: முடிந்த போட்டிகள்! கரைய தொடங்கிய நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியம் - இடிக்கத் தொடங்கிய புல்டோசர்கள்!
இந்தியா - அமெரிக்கா இடையிலான போட்டியே நாசாவு கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியாக அமைந்தது.
2024 டி20 உலகக் கோப்பைக்காக அவசர அவசரமாக கடந்த 5 மாதத்தில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு இந்தியா விளையாடிய 3 போட்டிகள் உள்பட கடந்த 10 நாட்களில் எட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இது முற்றிலும் டி20 உலகக் கோப்பை நடத்துவதற்காக கட்டப்பட்ட தற்காலிக ஸ்டேடியம் ஆகும்.
அகற்றப்படும் கிரிக்கெட் மைதானம்:
2024 டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையிலான போட்டியே இங்கு இறுதி போட்டியாக அமைந்தது. தற்போது முழுக்க முழுக்க டி20 உலகக் கோப்பைக்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஸ்டேடியம் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டு வருவதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை செய்தி நிறுவனமான ANI தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Several bulldozers have arrived at the New York stadium to dismantle the stadium. [ANI]
— Johns. (@CricCrazyJohns) June 13, 2024
- Only the pitch & ground will be left for the locals. pic.twitter.com/B92j0AmiMB
நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியம்:
2024 டி20 உலகக் கோப்பைக்காக தற்காலிகமாக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் சுமார் 34,000 பேர் அமரக்கூடிய வசதி அமைக்கப்பட்டது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியில் அனைத்து சீட்களும் நிரம்பி வழிந்தது.
நியூயார்க் நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள டிராப் - இன் பிட்சுகள் அமைக்க 8 முதல் 10 மாதங்களே ஆனது. இதுவே இந்த ஸ்டேடியத்தின் சராசரி ஸ்கோர் முதல் இன்னிங்ஸில் 108 ரன்களாக இருப்பதற்கு காரணம். முன்னதாக, 900 பரப்பளவில் இருந்த சுற்றுவட்டார பகுதியில் அடிலெய்டு ஓவலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்ணை கொண்டு 30 மில்லியன் டாலர் செலவில் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 250 கோடி) 8 மாதங்களுக்குள் இந்த ஸ்டேடியம் ஐசிசியால் கட்டப்பட்டது. இதன் காரணகாவே சீரற்ற பவுன்ஸ், மோசமான அவுட் பீல்டு என பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.
#WATCH | Nassau County, New York (USA): Bulldozers placed at the Nassau Cricket Stadium as the temporary stadium is set to be dismantled from tomorrow.
— ANI (@ANI) June 13, 2024
The T20 World Cup match between India and the US yesterday was played here. pic.twitter.com/iYsgaEOWlP
இந்தநிலையில் தற்போது இந்த மைதானம் இடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாசாவ் கிரிக்கெட் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அடுத்த மாத இறுதிக்குள் இருந்த தடயமே இருக்காது. மேலும், தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட இந்த டிராப் - இன் பிட்சுக்கள் அமெரிக்காவிலேயே இருக்குமா..? அல்லது மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கே கொண்டு செல்லப்படுமா? என்பது தெரியவில்லை.
அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என மூன்று அணிகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி, மூன்றிலும் வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்ததாக புளோரிடாவில் லாடர்ஹில், சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் கனடாவை எதிர் கொள்கிறது. இதுவே லீக் சுற்றில் இந்திய அணியின் கடைசி லீக் போட்டியாகும்.