IND vs AUS 1st Test: "ஆளப்போறான் தமிழன்.." ஆல்ரவுண்டர் அஸ்வின் புதிய வரலாறு படைப்பாரா? ரசிகர்கள் ஆர்வம்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் புதிய வரலாறு படைக்க வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடரில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட வாய்ப்பகுள் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். இவரது சுழலை எதிர்கொள்ளவே ஆஸ்திரேலிய வீரர்கள் இவரைப் போலவே பந்துவீசும் வீரரை கொண்டு சிறப்பு பயிற்சி மேற்கொண்டனர். அஸ்வின் சுழல் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த ஆல்ரவுண்டராகவும் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களையும் விளாசியுள்ளார்.
புதிய சாதனைக்கு வாய்ப்பு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியினரை தனது சுழற்பந்துவீச்சால் மிரட்டி வரும் அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 449 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நாளை நாக்பூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 2 வீரர்கள் மட்டுமே 3 ஆயிரம் ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். அந்த பட்டியலில் அஸ்வினும் மூன்றாவது வீரராக இணைய உள்ளார். இதற்கு முன்பு, புகழ்பெற்ற சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே 3000த்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் ப்ராட் 566 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார். அஸ்வின் இந்த சாதனையை படைத்தால் இந்தியாவில் இருந்து இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற வரலாற்றை படைப்பார்.
துருப்புச்சீட்டு:
37 வயதான அஸ்வின் இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3043 ரன்களை எடுத்துள்ளார். அதில் 5 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் 449 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அஸ்வின் ஒருநாள் போட்டியில் 113 போட்டிகளில் ஆடி 707 ரன்களும், 151 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 65 டி20 போட்டிகளில் ஆடி 184 ரன்களும், 72 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 184 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 157 விக்கெட்டுகளையும், 647 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக அஸ்வின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ICC WTC 2023 Final: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவது எப்போது? முழு விபரம் உள்ளே..!
மேலும் படிக்க: Gary Ballance : இரு நாடுகளுக்காக டெஸ்ட்டில் களம்.. சதம் அடித்து கலக்கிய புதிய பெருமையை பெற்றார் கேரி பேலன்ஸ்!
மேலும் படிக்க: