BCCI: கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம்.. புதிய பயிற்சியாளர்.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் பி.சி.சி.ஐ..!
இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கான 2023 - 2027ம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கையெழுத்தாகும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பணக்கார விளையாட்டாக திகழ்வது கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.யின் வருமானம் என்பது பல வகைகளில் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை கைப்பற்றுவதற்காக தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவுவது வழக்கம்.
ஒளிபரப்பு உரிமம்:
தற்போது இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இதனால், 2023 -2027ம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமம் விரைவில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமாக உள்ளது.
கோடிக்கணக்கான வருமானத்தை தரும் ஒளிபரப்பு உரிமம் என்பதால் ஸ்டோர் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பி.சி.சி.ஐ. செயலாளர் அமித்ஷா 2023 – 2027ம் ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உறுதி செய்யப்படும், செப்டம்பரில் நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளர்:
வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்பதாலும், அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் நடைபெறும் என்பதாலும் ஒளிபரப்பு உரிமைத் தொகை கடந்து முறையை காட்டிலும் இந்த முறை ஆயிரக்கணக்கான கோடிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், இந்திய மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் பி.சி.சி.ஐ. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக உள்ள ஹ்ரிஷிகேஷ் கனித்கர் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்பாக பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.
சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை அனுப்ப பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs WI: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
மேலும் படிக்க: HBD Souvrav Ganguly: ஆக்ஷன்.. அதிரடி.. அதகளம்..! கிரிக்கெட்டில் தனி ராஜாங்கம் நடத்திய 'தாதா' கங்குலி..!