(Source: ECI/ABP News/ABP Majha)
Babar Azam Records: நியூசி.க்கு எதிரான போட்டியில் அதிரடி சதம்… கோலி சாதனையை துவம்சம் செய்த பாபர் அசாம்!
6 சதங்களுடன் கேப்டனாக அடித்த சதங்கள் பட்டியலில் மைக்கேல் கிளிங்கருக்கு (7) பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் கோலி மற்றும் ஃபாப் டு பிளஸிஸ் ஐந்து சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் டி20 தொடக்க போட்டியில் தனது 100வது போட்டியில் விளையாடிய பாபர் அசாம் வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே எடுத்தார். தொடர்ந்து (நேற்று) சனிக்கிழமையன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் தொடரின் இரண்டாவது போட்டியில் ஒரு அற்புதமான சதத்தை அடித்து அந்த குறையை சரி செய்தார். அவரது சதத்தால் 4 விக்கெட்டுக்கு 192 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது. அந்த நாக் மூலம், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அசத்தலான சாதனையை பாபர் அசாம் அடித்து நொறுக்கியுள்ளார்.
நல்ல தொடக்கம் தந்த பாகிஸ்தான்
பவர்ப்ளேயில் நன்றாகவே ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் அணியை நல்ல நிலையில் வைத்திருந்தனர். ஆறு ஓவர் முடிவில், பாபர் 20 பந்துகளில் 32 ரன்களுடனும், மொஹமட் ரிஸ்வான் 16 பந்தில் 26 ரன்களுடனும் களத்தில் நின்றனர். பத்து ஓவர்களிலேயே 90 ரன்னைக் கடந்து விக்கெட் இழக்காமல் சென்று கொண்டிருந்த நேரத்தில், 11வது ஓவரில் தான் திருப்புமுனை ஏற்பட்டது. அரை சதத்தை பூர்த்தி செய்த ரிஸ்வான் மாட் ஹென்றி வீசிய நான்காவது பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தே புதிய பேட்ஸ்மேன் ஃபகர் சமானை போல்டாக்கினார் மாட் ஹென்றி.
திடீரென விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
நல்ல தொடக்கத்தை தந்த பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து 13 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தடுத்த ஓவர்களை வீசிய ரவீந்திரா மற்றும் ஜிம்மி நிஷம் முறையே சைம் அயூப், இமாத் வாசிம் ஆகியோரை வீழ்த்த திடீர் சரிவைக் கண்டது. அதன் பின் பாபர் சிறிது நேரத்தில் தனது அரைசத்தை பூர்த்தி செய்ய, பின்னர் பெரிய இலக்கை நோக்கி செல்ல, விரைவாக கியரை மாற்றி, அதிரடி காட்டத் துவங்கினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த இப்திகார் அகமது 19 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு, 87 ரன்கள் சேர்த்தனர். ஆட்டத்தின் கடைசி பந்தை சந்தித்த பாபர் பவுண்டரி அடித்து தனது மூன்றாவது T20I சதத்தை எட்டினார்.
பாபர் முறியடித்த சாதனைகள்:
இந்த சதம் மூலம், பாபர் சில T20 உலக சாதனைகளை முறியடித்துள்ளார்:
- அதிக டி20 சதங்கள் அடித்தோர் பட்டியலில், அவர் க்ளென் மேக்ஸ்வெல், காலின் முன்ரோ மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் இணைந்துள்ளார். இவர்கள் அனைவருமே 3 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 4 சதங்களுடன் ரோஹித் ஷர்மா முன்னணியில் உள்ளார்.
- ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் இது அவரது ஒன்பதாவது சதமாகும். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் பாபர் அசாம் உள்ளார்.
- மேலும் இந்த ஒன்பதில் ஆறு, அவர் கேப்டனாக இருந்து அடித்த சதங்கள் ஆகும். அந்த பட்டியலில் பிக் பாஷ் லீக் ஜாம்பவான், மைக்கேல் கிளிங்கருக்கு (7) பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த பட்டியலில் கோலி மற்றும் ஃபாப் டு பிளஸிஸ் ஐந்து சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.
லாகூரில் நடந்த இந்த T20I போட்டியில், பாபரின் சதமும், ஹாரிஸ் ரவுப்பின் நான்கு விக்கெட்டுகளும், பாகிஸ்தான் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. இந்த போட்டியில் பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.