Watch Video: அறிமுக வீரர் ஷமர் ஜோசப்பின் அதிவேக பவுன்சர்.. ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவின் தாடையை உடைத்த சோகம்!
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது, தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை பவுன்சர் பந்து தாக்கியதில் காயம் அடைந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் மதிய உணவுக்கு முன்பே, ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் மூன்றாவது நாளில் 26 ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்தியபோது, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவின் தாடையில் பந்து தாக்கியது. இதனால் நிலைகுலைந்த கவாஜா சிகிச்சைக்காக வெளியேறினார்.
உடைந்த தாடை பகுதி:
அடிலெய்டு ஓவலில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் வீசிய பவுன்சரை, கவாஜா எதிர்கொண்டார். அப்போது, அந்த பந்து கவாஜாவின் ஹெல்மெட்டில் தாக்கியதில் அவரது தாடை பகுதி உடைந்தது. மேலும், சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தமும் கொட்டியது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#ICYMI, Shamar Joseph drew blood from Usman Khawaja with a bouncer when the scores were level, forcing him to retire hurt 🤕
— Asad 🏏 (@TuadaSultan) January 19, 2024
Get Well Soon @Uz_Khawaja 🤲#AUSvWI #WTC25 #CricketTwitter pic.twitter.com/zfctlDthZY
ஆஸ்திரேலிய அணி வெற்றி:
ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது, தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பவுன்சர் தாக்கியதில் காயம் அடைந்தார். கவாஜா மைதானத்தை விட்டு வெளியேறும்போதும், அவரது வாயில் இருந்து லேசான ரத்தம் வெளியேறியது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு மார்னஸ் லாபுசாக்னே ஒரு ரன்னை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
ஸ்கேன் டெஸ்ட்:
காயத்திற்கு பிறகு கவாஜா டிரஸ்ஸிங் ரூமில் நடந்த முதற்கட்ட மூளையதிர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற்றததாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியது. அவரது தாடையில் ஏதேனும் காயம் உள்ளதா என்பதை கண்டறிய ஸ்கேன் செய்யப்பட்டது. அதிலும், ஸ்கேன் செய்ததில் கவாஜா நன்றாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
வருகின்ற ஜனவரி 25ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, கவாஜா மற்றொரு மூளையதிர்ச்சி சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தோல்வியுற்றால் அவர் சில காலம் ஓய்வில் இருப்பது அவசியம்.
போட்டி சுருக்கம்:
முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் 188 ரன்களுக்குள் சுருண்டது. அதன்பிறகு முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்களில் அனைத்து விக்கெட்டை இழக்க, 20 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்களை வீழ்த்திருந்தார்.