Shane Warne Injured: விபத்தில் சிக்கிய சுழற்பந்து லெஜண்ட் ஷேன் வார்னே...! தற்போதைய நிலைமை என்ன?
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார்.
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பல்வேறு நாட்டு லீக் கிரிக்கெட் அணிகளின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
52 வயதான ஷேன் வார்னே தனது பைக்கில் நேற்று வெளியே சென்றுள்ளார். அவருடன் மற்றொரு பைக்கில் அவரது மகன் ஜேக்சன் வார்னே உடன் சென்றுள்ளார். அப்போது, அவரது பைக் எதிர்பாராதவிதமாக சறுக்கியதில், ஷேன் வார்னே கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ஷேன் வார்னே சுமார் 15 மீட்டர் தொலைவு வரை சறுக்கி கொண்டே சென்று கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் தன்னுடைய கால் அல்லது இடுப்பு எலும்பு உடைந்திருக்கும் என்று ஷேன் வார்னே அஞ்சியிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரியளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது, ஷேன் வார்னே நலமுடன் உள்ளார். அவரது மகனுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக, ஷேன் வார்னே கூறியிருப்பதாவது, நான் சற்று அடிபட்டு, காயப்பட்டு மிகவும் வேதனையாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது ஷேன் வார்னே மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும், 55 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 57 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி டெஸ்டில் 3 ஆயிரத்து 154 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1,018 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 198 ரன்களையும் அடித்துள்ளார்.
மேலும் படிக்க : Hardik Pandya | இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்ட்யா கேட்டது என்ன தெரியுமா...?
ஷேன் வார்னே வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ள புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் வர்ணனையாளராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஐ.பி.எல். கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே தான் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்