AUS Vs AFG World Cup 2023: அரையிறுதியில் நுழைவது யார்? ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை
AUS Vs AFG World Cup 2023: உலகக் கோப்பையில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
AUS Vs AFG World Cup 2023: மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில், வெற்றி பெறும் அரையிறுதிக்கான வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கும்.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 38 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தென்னாப்ரிக்கா அணி அரையிறுதியில் விளையாடுவதும் உறுதியாகிவிட்டது. மீதமுள்ள 2 இடங்களுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை தலா 7 லீக் போட்டிகளில் விளையாடி, தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 3 மற்றும் 6வது இடத்தில் உள்ளன. இன்று ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், 3வது இடத்தை உறுதி செய்யும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும்.
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் மோதல்:
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி நான்கில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்று தங்களுக்கான அரையிறுதி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் & பலவீனங்கள்:
ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் ஆகியோர் அசத்தலான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் மட்டும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை கொண்டு ஜாலம் நிகழ்த்தி வருகிறது. பேட்டிங்கிலும் முன்கள வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு அணியாக சேர்ந்து முயற்சித்து வெற்றியை வசப்படுத்துவது ஆப்கானிஸ்தானின் கூடுதல் பலமாக உள்ளது. அதேநேரம், அசுரத்தனமான ஃபார்மில் உள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை, பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை மைதானத்தில் ஆரம்பத்திலேயே தடுக்க தவறவிட்டால் ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாகிவிடும்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலுமே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
மும்பை வான்கடே மைதானம் எப்போதும் போல பேட்ஸ்மேன்களுக்கு முழு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. பந்துவீச்சாளர்கள் கடுன்ம் நெருக்கடிய சந்திக்கக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, பிரமாண்ட இலக்கை நிர்ணயிக்கவே விரும்புகின்றனர்.
உத்தேச அணி விவரங்கள்:
ஆஸ்திரேலியா:
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி
வெற்றி வாய்ப்பு: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு