Asif Ali : முட்டாள்தனத்தின் உச்சம்..! ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும்..! ஆவேசப்படும் ஆப்கான் முன்னாள் கேப்டன்
ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட ஆசிப் அலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் குல்பதீன் நையிப் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கோப்பைப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் கசப்பான அனுபவத்தையே தந்துள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 130 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் ஆசிப் அலி 19வது ஓவரை வீசிய பரீது அகமது பந்தில் அவுட்டானார். பின்னர், பரீது அகமதுவுக்கும், அவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆசிப் அலி தனது பேட்டால் பரீது அகமதுவை தாக்க முயன்றார். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
This is stupidity at extreme level by Asif Ali and should be ban from the rest of the tournament, any bowler has the right to celebrate but being physical is not acceptable at all. @icc @ACCMedia1 pic.twitter.com/3ledpmM3mt
— Gulbadin Naib (@GbNaib) September 7, 2022
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான குல்பதீன் நையிப் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆசிப் அலியை இறுதிப்போட்டியில் ஆட அனுமதிக்காமல் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, குல்பதீன் நையிப் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ஆசிப் அலி செய்தது முட்டாள்தனத்தின் உச்சபட்சம். அவரை இந்த தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் ஆட தடை விதிக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு கொண்டாட உரிமையுள்ளது. ஆனால், உடல் ரீதியான மோதலை அனுமதிக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசியில் 1 விக்கெட் இழப்பிற்கு திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி. பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலிக்கும், ஆப்கானிஸ்தான் வீரர் பரீது அகமதுவிற்கும் 25 சதவீதம் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து அபராதமாக விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் போட்டி நிறைவு பெற்ற பிறகு, மைதானத்தில் குழுமியிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அடித்து உதைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயதான ஆசிப் அலி சமீபகாலமாக பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார். அவர் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களுடன் 382 ரன்களை எடுத்துள்ளார். 44 டி20 போட்டிகளில் ஆடி 476 ரன்களை எடுத்துள்ளார், பாகிஸ்தான் அணியின் பினிஷர் ரோலில் சமீபகாலமாக திறம்பட ஆடி வருபவர் ஆசிப் அலி என்பது குறிப்பிடத்தக்கது.