Asian Games: ஆசிய விளையாட்டு - அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி ஃபைனலுக்கு முன்னேற்றம்
Asian Games: வங்கதேச அணியை வீழ்த்தி ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
Asian Games: ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி , இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா - வங்கதேசம் மோதல்:
சீனாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி ஏற்கனவே தங்கம் வென்று அசத்தியுள்ளது. தொடர்ந்து, ஆடவர் கிரிக்கெட்டில் காலிறுதியில் நேபாளம் அணியை விழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்படி, இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சற்று தாமதமானது.
பந்துவீச்சில் மிரட்டிய வங்கதேசம்:
தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவிச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, ஆரம்பம் முதலே ரன் சேர்க்க தடுமாறியது. அதிகபட்சமாக ஜாகெர் அலி 24 ரன்களையும், பர்வேஸ் ஹுசைன் 23 ரன்களையும், ரகிபுல் ஹாசன் 14 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி சார்பில் தமிழக வீரர்களான சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அவர்களுக்கு உறுதுணையாக அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னோய் மற்றும் ஷபாஸ் அஹ்மது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அபார வெற்றி - ஃபைனலுக்கு முன்னேற்றம்:
தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. காலிறுதியில் சதம் விளாசிய ஜெய்ஷ்வால், இன்றைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா கூட்டணி பொறுப்பாக விளையாடி ரன் சேர்த்தது. குறிப்பாக திலக் வர்மா அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசி அரைசதம் கடந்தார். இதனால், வெறும் 9.2 ஓவர்கள் முடிவிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி இலக்கை எட்டியது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, இந்தியா ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திலக் வர்மா 26 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை குவித்தார். கேப்டன் ருதுராஜ் 26 பந்துகளில் 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 40 ரன்களை சேர்த்தார்.
இறுதிப்போட்டியில் மற்றொரு அணி யார்?
காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கான்ஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். இதன் மூலம், இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.