IND vs PAK: ஆரம்பமே இப்படியா? முட்டுக்கட்டை போட்ட வருணபகவான்! வருத்தத்தில் ரசிகர்கள்! என்ன ஆகும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
போட்டி துவங்கி 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை அதிகமாக பெய்து வருவதால், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை பல்லேகேலேவில் வெளுத்து வாங்கி வருகிறது. போட்டி துவங்கி 4.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை அதிகமாக பெய்து வருவதால், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 18 பந்தில் 2 பவுண்டரி விளாசி 11 ரன்களுடனும், சுப்மன் கில் 8 பந்தில் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்க்கும் கிரிக்கெட் தொடர்களில் ஆசியக் கோப்பைத் தொடரும் ஒன்று. இந்த கிரிக்கெட் தொடரில் ஆசியாவில் உள்ள மிகவும் பலமான அணிகளாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளின் ஆட்டம் என்பது எப்படி உள்ளது, ஆசிய கண்டத்தில் நாம் விளையாடச் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை மற்ற கிரிக்கெட் நாடுகள் கூர்மையாக கவனிக்கும். இப்படி கவனிக்கப்படும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ட்ரீட் என்பதுபோல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இதற்காக தவம் இருப்பது போல காத்திருந்தது இன்றைய தினத்தித்திற்காகத்தான்.
இந்தியா - பாகிஸ்தான்
ஆசியக் கோப்பைத் தொடரோ உலகக்கோப்பைத் தொடரோ சாம்பியன்ஷிப் தொடரோ, எந்தவகைத் தொடராக இருந்தாலும் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றது என்றால், மைதானம் முழுவதும் ஆரவாரத்தில் குலுங்கிக்கொண்டு இருந்தது.
போட்டி நடக்கும் மைதானம் அமைந்துள்ள இலங்கையின் பல்லேகேலே பகுதியில் போட்டி நடக்கும் தினமான செப்டம்பர் 2ஆம் தேதி 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த செய்தியால் போட்டி நடைபெற வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. போட்டி தொடங்க தாமதமானால் ரசிகர்களுக்காகவாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் போட்டி குறித்த நேரத்தில் துவங்கப்பட்டது. கடும் மேக மூட்டத்திற்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய விரும்புவதாக அறிவித்தார். இந்நிலையில், இந்திய அணி தனது பேட்டிங்கிகைத் துவங்கிய சிறுது நேரத்தில் மழை பெய்தது.