IND Vs SL Final, Match Highlights: 8வது முறையாக ஆசிய கோப்பை.. இலங்கையை சுருட்டி எறிந்த இந்தியா; 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
IND Vs SL Final, Match: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
IND Vs SL Final, Match: 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என்ற சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி இலங்கையில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்திய அணியின் அபார பந்து வீச்சில் இலங்கை அணி 50 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இளம் ஜோடி, 51 ரன்கள் என்ற எளிய இலக்கை 6.1 ஓவர்களில் எட்டினர். இதனால் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஆசிய கோப்பையையும் 8வது முறையாக கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அதிக பந்துகளை மீதம் வைத்து ஒருநாள் போட்டி வரிசையில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்த போட்டியில் இந்திய அணி 6.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதால், 263 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 19 பந்தில் 6 பவுண்டரியுடன் 27 ரன்களும், இஷான் கிஷன் 18 பந்தில் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பெறும் 10வது வெற்றியாக இதுவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதேபோல் சர்வதேச அரங்கில் ரோகித் சர்மாவின் 250வது ஒருநாள் போட்டி ஆகும்.
அதேபோல் இந்திய அணியின் முகமது சிராஜ் இந்த போட்டியில் கைப்பற்றிய 6 விக்கெட்டுகள் மூலம், ஒருநாள் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய 4வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் விக்கெட்டை போட்டியின் முதல் ஓவரில் இழந்தது. முதல் ஓவரை பும்ரா வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெராரா தனது விக்கெட்டை இழந்தார். இதுவே இலங்கை அணிக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில், அதன் பின்னர் போட்டியின் 4வது ஓவரில்தான் இலங்கை அணி அணுகுண்டு காத்திருந்தது.
அதாவது போட்டியின் 4வது ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதாவது 4வது ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷ்கண்ணா விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் சமர விக்ரமாவின் விக்கெட்டையும், நான்காவது பந்தில் அசலங்காவின் விக்கெட்டையும், கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து சிராஜ் போட்டியின் 6வது ஓவரினை வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் இலங்கை அணியின் துஷன் ஷனகாவின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் போட்டியின் 12வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரின் 2வது பந்தில் குஷால் மெண்டிஸை போல்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.