Ind vs HKG, Match Highlight: ஹாங்காங் அணிக்கு தண்ணி காட்டிய ரோகித் படை.. 40 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
Asia Cup 2022, IND vs HKG: ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பைத் தொடரில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த போட்டியின் சூப்பர் ஸ்டார் ஹர்திக் பாண்டியாக்கு பதிலாக, இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்கினார். டாஸ் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் ஹாங்காங் அணி இறங்கியது. ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். யாசிம் முர்தாசா 9 ரன்கள் எடுத்து அர்ஷீதீப் சிங் வீசிய 2 வது ஓவரில் வெளியேற, அடுத்து களமிறங்கிய பாபர் ஹயாத் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார்.
கேப்டன் நிஜாகத் கான் மற்றும் பாபர் ஹயாத் ஜோடியின் ஆட்டத்தால் ஹாங்காங் அணி 6 ஓவர் முடிவில் 51 ரன்கள் குவித்தது. அதே ஓவரில் ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் 10 ரன்கள் எடுத்து ஜடேஜா கைகளில் ரன் அவுட் ஆக, அடுத்ததாக 35 பந்துகளில் 41 ரன்கள் குவித்த பாபர் ஹயாத் ஜடேஜா பந்தில் ஆவேஷ் கானிடம் கேட்சானார். 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ஹாங்காங் 98 ரன்கள் எடுத்திருந்தது.
ஒரு கட்டத்தில் ஹாங்காங் அணிக்கு 32 பந்துகளுக்கு 88 ரன்கள் தேவை என்ற நிலையில், 14 ரன்கள் அடித்திருந்த ஈஜாஸ் கானை ஆவேஷ் கான் க்ளீன் போல்ட் செய்தார். தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஹாங்காங் அணியின் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியது.
18 பந்துகளில் 77 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி 30 ரன்கள் எடுத்த கிஞ்சித் ஷாவை அவுட் செய்தார். 19 வது ஓவர் வீசிய ஆவேஷ் கானின் பந்தில் ஜீஷன் அலி ஒரு சிக்ஸரும், ஸ்காட் மெக்கெக்னி ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி அடித்தனர்.
இதனால் கடைசி 6 பந்துகளில் ஹாங்காங் அணிகு 53 ரன்கள் தேவையாக இருந்தது. அர்ஷீதீப் சிங் அந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுகொடுக்க, இதன் மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.