Ashes Test: டெஸ்ட் வாழ்க்கையில் முதன்முதலாக கோல்டன் டக் அவுட்டான உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீரர்..! ஆஷசில் நிகழ்ந்த ஆச்சரியம்..!
உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீரர் மார்னஸ் லபுஷேனே முதன்முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ஆஷஸ் முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 393 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா சதத்தின் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
கோல்டன் டக் அவுட்:
கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷேனே ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய முதல் பந்திலே விக்கெட் கீப்பர் பார்ஸ்டோவிடம் கேட்ச் ஆகி டக் அவுட்டாகி வெளியேறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்திறன் கொண்ட லபுஷேன் கோல்டன் டக் அதாவது தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை ஆகும். 28 வயதான லபுஷேன் இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 67 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ள லபுஷேன் இந்த போட்டியில்தான் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.
🚨1st golden duck for Marnus Labuschagne in tests🚨#Ashes2023 #Ashes23 #Ashes pic.twitter.com/4LMitwcfXl
— Cricket Videos 🏏 (@Abdullah__Neaz) June 17, 2023
ரசிகர்கள் அதிர்ச்சி:
லபுஷேனே இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள், 2 இரட்டை சதங்கள், 15 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 461 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன்களை விளாசியுள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 வீரராக திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரர் லபுஷேனே கோல்டன் டக் அவுட்டாகியிருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் லபுஷேனுக்கு பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி அவுட்டானார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எதிராக அபார சதம் அடித்த ட்ராவிஸ் ஹெட் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிரீன் 38 ரன்களில் மொயின் அலி பந்தில் போல்டானார்.
விறுவிறுப்பாகும் போட்டி:
இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பென்ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். போட்டி 2 நாட்கள் மட்டுமே முடிந்துள்ளதால் இரு அணிகளும் அடுத்தடுத்து வரும் நாட்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி போட்டியை வெல்ல முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: “என் கிரிக்கெட் வாழ்கை முடிந்து விட்டது என்று என் மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன்” - WTC க்கு பின் அஸ்வின்!
மேலும் படிக்க: ICC WC Qualifiers 2023: இன்று தொடங்குகிறது உலககோப்பை தகுதிச்சுற்று..! முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நேபாளம் மோதல்..!