Ashes Test: ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை இழக்கும் ஆஸ்திரேலியா.. பழிக்கு பழி வாங்குமா இங்கிலாந்து? விறுவிறுப்பான கட்டத்தில் ஆஷஸ்..!
Ashes Test: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது.
Ashes Test: உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் முக்கியமான போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி தான் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வரை உள்ளது. ஆனால் இந்த இரு அணிகளும் தங்களுக்கு இடையிலான நேரடித் தொடர்களை அரசியல் காரணுங்களுக்காக நிறுத்திக்கொண்டுள்ளன. ஆனால் அதேபோல், வேறு இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு உலக கிரிக்கெட் அரங்கமே காத்திருக்கும் என்றால் அது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குத்தான்.
251 ரன்கள் இலக்கு:
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும் இங்கிலாந்து 237 ரன்களும் சேர்த்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு, 251 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், இதுவரை மூன்று நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் தேவைப்படுகிறது. மேலும் கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளது.
வெற்றி பெறுமா இங்கிலாந்து?
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தான் கள நிலவரமாக உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தான் இந்த தொடரில் நீடிக்க முடியும். தோல்வியைச் சந்தித்தால் இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்ற சூழல் ஏற்படும். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பதுடன் தொடரையும் தனதாக்கி, இங்கிலாந்து மண்ணில் ஆதிக்கம் செலுத்தும்.
மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உள்ள பேட் கம்மின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காத கேப்டனாக உள்ளார். இந்த போட்டிக்கு முன்னர் வரை 6 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள பேட் கம்மின்ஸ் இதுவரை 5 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் ட்ராவையும் சந்தித்துள்ளார். இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்தால் பேட் கம்மின்ஸ் சந்திக்கும் முதல் தோல்வியாக இருக்கும்.
இந்த போட்டியில் இதுவரை இங்கிலாந்து அணிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை இழக்காது என்ற நம்பிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.