Cricket Tamil Commentary: "லூசு, ஓல்டு கட்டை".. அத்துமீறும் தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரி.. கடுப்பாகும் ரசிகர்கள்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரியில் , தொடர்ந்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரியில் , தொடர்ந்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் கமெண்ட்ரி:
கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வதில் வர்ணனை முக்கிய பங்காற்றுகிறது. விளையாட்டு தொடர்பாக பெரிதாக எதுவும் தெரியாத நபர்களும் பல்வேறு நுணுக்கங்களை தெரிந்துகொள்ளவும், பார்வையாளர்களின் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். உதாரணமாக, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், வெற்றிக்கான சிக்சரை தோனி அடித்தபோது அதனை ரவி சாஸ்திரி வர்ணனை செய்த விதம் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனாலும் எந்நாளும் மறக்கமுடியாது. ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வையும் அவ்வளவு எதார்த்தமாக தனது வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதுதான், வர்ணனையின் உண்மையாக முகமும் கூட.
சர்ச்சையாகும் தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரி:
ஆனால், அனைத்து தரப்பு மக்களுக்கும்m கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பதாக கூறி, அண்மையில் தமிழ் மொழியிலும் கிரிக்கெட் வர்ணனை தொடங்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுப்ரமணியன் பத்ரிநாத், ஸ்ரீகாந்த், அனிருதா ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர்ஜே பாலஜி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இதில் பலரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்களாக இருந்தாலும், அவர்களது வர்ணனை என்பது மிகவும் ஆட்சேபனைக்கு உரியதாகவே உள்ளது. வீரர்களை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது, ஒருதலைபட்சமாக கருத்துகளை தெரிவிப்பது என காண்போரை முகம் சுழிக்க வைப்பதோடு சர்ச்சையிலும் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் தான் நடப்பு ஐபிஎல் தொடரிலும் மோசமான கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.
சாவ்லா, ஷாருக்கான் மீது விமர்சனம்:
மும்பை அணிக்காக விளையாடி வரும் பியூஷ் சாவ்லா பந்து வீசியபோது, அவரை ”ஓல்டு கட்டை” என கூறி சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். வழக்கமாக தமிழக அணி வீரர்கள் விளையாடும் எப்போது அவர்களை பெருமையாக தான் பேசுவார்கள். ஆனால், பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஷாருக்கானை மட்டும் வேறுமாதிரி கையாண்டுள்ளனர். “இவனுக்கு ஸ்பின் பால் போட்டா ஆடவே தெரியாது, வேகமா போட்டா மட்டும் தூக்கி அடிச்சுருவான்” என பேசியுள்ளனர். ஸ்ரீகாந்த் போன்ற நட்சத்திர வீரர்களே, சர்வதேச வீரர்களை கூட வாடா, போடா என தான் வர்ணனையின் போது குறிப்பிடுகின்றனர்.
ரசிகர்கள் காட்டம்:
சுப்ரமணியம் பத்ரிநாத் தனக்கு 42 வயதாகிறது என்பதை மறந்துவிட்டு, 34 வயதாகும் சாவ்லாவை பார்த்து ”ஓல்டு கட்டை” என கூறுவது நியாயமா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழக வீரர்களிலேயே சிலரை மட்டும் வித்தியாசமாக பார்ப்பது ஏன் என வினவுகின்றனர். தமிழில் வர்ணனை செய்யும் பலரும் சில ஆண்டுகள் கூட இந்திய அணிக்காக விளையாடமல், குறைந்த காலகட்டத்திலேயே பிசிசிஐ நிர்வாகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்கள் தான். ஆனால், உலக கிரிக்கெட்டில் பல சாதனை படைத்தவர்களை கூட நாகரீகம் என்பது சிறிதும் இன்றி வாடா, போடா, லூசு என வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவது சிறிதும் ஏற்கும் வகையில் இல்லை. அதோடு, கிரிக்கெட் பற்றி பார்வையாளர்கள் புதியதாக ஏதாவது அறிந்துகொள்ளும் வகையிலும் இவர்கள் தகவல் எதையும் பகிர்வதில்லை என்பதும் ஏமாற்றமளிக்கிறது.