ஐபிஎல் வரலாற்றில் புதிய சம்பள சாதனையை நோக்கி தல தோனி -எவ்வளவு சம்பளம் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் யார் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிய எதிர்த்து விளையாட உள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் போல் இருக்கும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இந்தப் போட்டியில் விறுவிறுப்பு இருக்கும். ஏற்கெனவே முதல் பாதியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்து உள்ளது. ஆகவே அந்தத் தோல்விக்கு இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் தொடரில் வாங்கும் சம்பளத்துடன் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். 13ஆவது ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி இரண்டு முறை ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அது தவிர எஞ்சிய அனைத்து தொடர்களிலும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். இந்த சம்பளம் தொடர்பாக ஆங்கில தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தோனியின் சம்பளம் ஒரு சீசனுக்கு 6 கோடி ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் 2011-2013 வரையிலான ஐபிஎல் தொடர்களுக்கு ஒரு சீசனுக்கு 8.28 கோடியாக அதிகரித்தது. அதன்பின்னர் 2014ஆம் ஆண்டு இவரின் சம்பளம் 12.5 கோடியாக மீண்டும் அதிகரித்தது. 2016ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி இல்லாததால் அதே சம்பளத்திற்கு புனே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் திரும்பிய சிஎஸ்கே அணியில் தோனி மீண்டும் இருந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு முதல் இவருடைய ஒரு சீசன் சம்பளம் 15 கோடி ரூபாயாக இருந்து வருகிறது. ஆக மொத்தும் 13ஆவது ஐபிஎல் தொடரில் அவர் 15 கோடி சம்பளம் வாங்கும் பட்சத்தில் அவருடைய மொத்த ஐபிஎல் வருமானம் 152,84,00,000 ரூபாயாகும். அதாவது 150 கோடி ரூபாய்க்கு மேல் ஐபிஎல் தொடரிலிருந்து மட்டும் பெற்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் பெற்றவர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். அவர் மொத்தமாக இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டும் 146.6 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது ரோகித் சர்மாவின் ஒரு சீசன் சம்பளம் 15 கோடி ரூபாயாக உள்ளது. ரோகித் சர்மா முதல் ஐபிஎல் தொடரில் வாங்கிய சம்பளத்தைவிட தற்போது அவருடைய சம்பளம் 4 மடங்கு அதிகமான ஒன்றாக உள்ளது. அவர் தொடக்கத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணியில் ஒரு முறை கோப்பையையும் வென்று தந்துள்ளார்.
இந்தப் பட்டியில் மூன்றாவது இடத்தில் தற்போதைய இந்திய கேப்டனும் ஆர்சிபி அணியின் கேப்டனுமான விராட் கோலி உள்ளார். 13 ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி உள்ள கோலி மொத்தமாக 143.2 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 13 ஐபிஎல் தொடர்களில் விளையாடியும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற சோகம் விராட் கோலியை தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறது. தற்போது விராட் கோலியின் ஒரு சீசனிற்கான சம்பளம் 17 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ப்ளூ ஜெர்ஸியில் திங்கட்கிழமை இறங்கும் ஆர்சிபி- காரணம் என்ன?