8 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இந்திய கூடைப்பந்து அணி: இதுவே இலக்கு : ஆதவ் அர்ஜுனா
இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செங்கல்வராய நாயுடு, செயல் உறுப்பினர் அஸீஸ் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூடைப்பந்து:
சென்னையை அடுத்த உத்தண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூடைப்பந்து விளையாட்டின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாக அலுவலகம் வரும் ஆகஸ்ட் மாதம் டெல்லியில் திறக்க உள்ளது குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மேம்பாடு அளிக்க சென்னையில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் ஓராண்டு தேசிய விளையாட்டு முகாம் ஏற்படுத்தப்படுவது குறித்தும் அறிவிக்கப்பட்டது.
தலைவர் நியமனம்:
மேலும், TRW எனும் டேலண்ட் ரீச் விங் உருவாக்கப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, திறமையை மேம்படுத்துவதை இந்திய கூடைப்பந்து சம்மேளனம் நோக்கமாகக் கொண்டது என்பதை உறுதியளித்து, TRW வின் தலைவராக அமன் சர்மா நியமிக்கபட்டார்.
அதேபோல, பயிற்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புகழ்பெற்ற கூடைப்பந்து பயிற்சியாளரான, ஸ்காட் ஃப்ளெமிங் நியமிக்கப் பட்டுள்ளார். மேலும், பிரத்யேக 3x3 பயிற்சியாளரை நியமிப்பது குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடைப்பந்து மைதானங்கள்:
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, கூடைப்பந்து விளையாட்டில் லீக் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடிக்கு அடுத்து மிகப் பிரமாண்டமான துவக்க விழாவுடன் கூடைப்பந்து போட்டிகளை நடத்தவும், அவற்றை பெரும்பாலும் மெரினா, ஜுஹூ, வைசாக் உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் உள்ள 15 லட்சம் பள்ளிகளில், 11 லட்சம் பள்ளிகள் கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் கூடைப்பந்து மைதானங்கள் தேவையான அளவு இருப்பதாக கூறினார்.ஆண்களுக்கான லீக் போட்டிகள் போல பெண்களுக்கான லீக் போட்டிகளையும் இணைந்தே நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், சீனியர், ஜூனியர், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்த உள்ளதாகவும் கூறினார்.
ஒலிம்பிக்கில் இந்திய அணி:
மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிராவில் இரண்டு தேசிய விளையாட்டு அகாடமிகளை நிறுவுவதன் மூலம், அகாடமிக்கு 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 120 திறமையான வீரர்களை உருவாக்கவும் அவர்களுக்கு முழு உதவித்தொகையைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக இந்த அகாடமிகளில் 12 வயது முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விரைவில் ஆசிய விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் கூடைப்பந்து அணி பங்கேற்க வேண்டும் என்றும், எட்டு ஆண்டுகளுக்குள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கு இந்திய அணி தயார் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.