Ganguly on IPL: ஐபிஎல் 2021 போட்டிகள் இனி இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை - சௌரவ் கங்குலி..
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 தொடர் வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் தொடரில் 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்பதே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. தொடர் நடைபெறும் போது ஐபிஎல் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை, இது நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.பி.எல் தொடரை முழுமையாக நடத்தி முடிக்க பிசிசிஐ முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடர் நடைபெற்றாலும், போட்டிகள் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இல்லை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி.
ஏற்கனவே இங்கிலாந்து ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த ஆர்வம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்பாக ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்தமுடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சவுரவ் கங்குலி "இங்கிலாந்து தொடருக்கு பின்பு இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது" அதனால் இங்கிலாந்தில் தொடர் நிறைவடைந்தவுடன் ஐபிஎல் 2021 போட்டிகளை தொடர்வதும் கடினமே என தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்றாவது அலைக்கான சூழலும் தற்போது இந்தியாவில் தென்படுகிறது, ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்துள்ள நிலையில், கால சூழலைக்கொண்டு முடிவெடுக்க வேண்டிய கட்டாயமும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நான்கு நாடுகளில் ஐபிஎல் நடத்தப்பட வாய்ப்பு..
இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இங்கு டி20 லீகு போட்டியை நடத்துவதற்கான கட்டமைப்புகளும் உண்டு. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 3-வது அலை ஏற்பட்டால், அதுவும் மாற்றியமைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனான தொடர் முடிவடைகிறது, அதற்கு பின் அல்லது டி 20 உலககோப்பைக்கு பின் உள்ள காலகட்டம் மட்டுமே தற்போது சர்வதேச போட்டிகள் இல்லாத காலமாக உள்ளது. ஆக ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் காலண்டர், நோய்த்தொற்று பாதிப்பு சூழல், பேச்சுவார்த்தையில் மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன் ஏற்படும் முடிவுகள் ஆகியவையே தீர்மானிக்கும்.