பிசிசிஐ-க்கு கட்டணத்தை செலுத்தாத பைஜூஸ்! ஸ்பான்ஸர்ஷிப்பிலிருந்து வெளியேறும் பேடிஎம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை உபயதாரராக இருக்கும் பைஜூசுக்கு, நிலுவையில் இருக்கும் கடனை அடைக்க கால அவகாசம் வழங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை உபயதாரராக இருக்கும் பைஜூசுக்கு, நிலுவையில் இருக்கும் கடனை அடைக்க கால அவகாசம் வழங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
86 கோடி கட்டண நிலுவை:
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை உபயதாரராக 2019ம் ஆண்டு வரை ஓப்போ நிறுவனம் இருந்து வந்தது. ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடையும் முன்பே அதன் மீதி கால ஒப்பந்தத்தை பைஜுசிடம் விற்பனை செய்தது. இந்திய அணிக்கு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப் செய்யும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளுக்கு பேடிஎம், அன் அகாடமி, பைஜூஸ், க்ரெட் ஆப், கார்ஸ் 24 போன்ற நிறுவனங்கள் ஸ்பான்ஸர்ஷிப் செய்தன.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற இலங்கை இந்தியா இடையிலான போட்டிகளுக்குப் பிறகு, பிசிசிஐ மற்றும் பைஜூசுக்கு இடையேயான ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, அதனை நீட்டிக்க பைஜூஸ் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதனையடுத்து இந்த ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது 18 மாதங்களுக்கு சுமார் 55 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 439 கோடிக்கு நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் வரை அவகாசம்:
இந்த நிலையில், பிசிசிஐக்கு பைஜுஸ் நிறுவனம் வைத்துள்ள நிலுவைத் தொகையான 86.21 கோடி ரூபாயை செலுத்த இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பாதி வரை கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், செலுத்தாத பட்சத்தில் அதன் வங்கி கியாரண்டி பணமாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிசிசிஐ-ன் ஆவணப்படி 16.7.2022 தேதிப்படி வரவேண்டிய 106.49 கோடி ரூபாயில் 86.21 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், புதிய வங்கி கியாரண்டியை இன்னும் தாக்கல் செய்யாம இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட ஆன்லைனில் கல்வி கற்பித்த பைஜுஸ் நிறுவனம் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில் இதற்கான வரவேற்பு குறைந்துவிட்டது. இதனையடுத்து, மாணவர்கள் சேர்க்கை பைஜுசில் வெகுவாக குறைந்துவிட்டநிலையில் வருவாயும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், பைஜூஸ் டியூசன் சென்ட்டர் என்ற பெயரில் ஆஃப்லைன் கல்வித்திட்டத்தை பைஜுஸ் அறிவித்திருக்கிறது.
வெளியேறும் பைஜூஸ்:
பைஜூஸ் கட்டண நிலுவை வைத்திருக்கும் நிலையில், ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து வெளியேறுவதாக பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிசிசிஐ உயர்நிலைக் கூட்டத்தின் போது தனது ஸ்பான்ஸர்ஷிப் உரிமத்தை மாஸ்டர்கார்டுக்கு வழங்க அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேடிஎம்-மில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் அதன் செலவீனங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி பேடிஎம் பிசிசிஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய உள்ளூர் அணி போட்டிகளின் ஸ்பான்ஸர்ஷிப்பை சர்வதேச நிறுவனமான மாஸ்டர் கார்டுக்கு வழங்க இருப்பதாக கூறியிருந்தது.
பேடிஎம்மின் இந்த முடிவுக்கு பிசிசிஐ அனுமதி வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.