Australian Players in Maldives: ஒரு வழியாக மாலத்தீவில் இருந்து தாயகம் திரும்புகிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்
மாலத்தீவில் தவித்து வரும் 38 ஆஸ்திரேலிய வீரர்களும் திங்கள் கிழமை ஆஸ்திரேலியா திரும்பவுள்ளனர்...
ஐபிஎல் 2021 தொடர் வீரர்களுகள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த மே 4ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதேநேரம் இந்தியாவில் ஏற்படும் அதிகப்படியான பாதிப்புகளை கண்ட ஆஸ்திரேலியா, இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்தது, அத்துடன் மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள தடையும் விதித்தது.
நிறைவுக்கு வந்துள்ள பயண தடை...
மே 15-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த தடை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது...
பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மைக்கேல் ஸ்லேட்டர் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த 38 நபர்கள் தற்போது மாலத்தீவில் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள தனி விமானத்தில் திங்கள் கிழமை ஆஸ்திரேலியா சென்று, அங்கே ஹோட்டல்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி கொரோன காரணமாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை புகழ்ந்த நிக் ஹாக்லே..
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார். பிசிசிஐ நிர்வாகம் வீரர்களை மாலத்தீவு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமின்றி, அங்கிருந்து மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பவும் தனி விமானம் ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். வீரர்களை ஏன் இந்தியா அனுப்பினோம் என ஆஸ்திரேலியா நினைக்கிறதா என்று நிக் ஹாக்லேவிடம் கேள்வி எழுப்பிய போது "நிச்சயமாக இல்லை, இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் அனைவர் மனதையும் பாதித்துள்ளது, இந்த தொடரை பாதுகாப்பாக நடத்த அத்தனை ஏற்பாடுகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் இறுதியாக இந்தியாவில் நிலவிய அப்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தொடர் ஒத்திவைத்துள்ளது" என தெரிவித்தார்..
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி, வீரர்களின் அந்தந்த அணிகளும் வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்...