Asian Games 2023: தாத்தா வழியில் தந்தை.. தந்தை வழியில் மகள்... தலைமுறை தலைமுறையாக பதக்கத்தை வெல்லும் குடும்பம்!
1978 மற்றும் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ரந்தீர் சிங், தற்போது ஒலிம்பிக் கவுன்சிலின் செயல் தலைவராக இருந்து வருகிறார்.
ஆசிய விளையாட்டு போட்டி 2023 ல் இன்றைய நாள் இந்தியாவிற்கு சிறப்பானதாகவெ இருந்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்தியாவின் ராஜேஸ்வரி குமார், மனிஷா கீர் மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் மகளிர் அணி ஈவென்ட் ட்ராப்பில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளி வென்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ராஜேஸ்வரியைப் போலவே அவரது தந்தையும் துப்பாக்கி சுடும் வீரராக இருந்துள்ளார். முன்னதாக, ராஜேஸ்வரியின் தந்தை ரந்தீர் சிங் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
யார் இந்த ரந்தீர் சிங்..?
1978 மற்றும் 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ரந்தீர் சிங், தற்போது ஒலிம்பிக் கவுன்சிலின் செயல் தலைவராக இருந்து வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் ரந்தீர் சிங். அவரது மகள் ராஜேஸ்வரி இந்த முறை ஆசிய விளையாட்டு 2023 இல் பங்கேற்கிறார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு ராஜேஸ்வரியின் தந்தையும் உடன் சென்றுள்ளார். அவரது மகளும் இப்போது அவரது பாதையில் சென்று நாட்டுக்காக பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ட்ராப் அணி போட்டியில் ரந்தீர் அணி வெள்ளி வென்றார், மேலும் OCA தலைவராக இருந்த அவரது தந்தை ராஜா பாலேந்திர சிங் தான் அவருக்கு பதக்கங்களை வழங்கினார்.
அதேபோல், இன்று பெண்கள் ட்ராப் அணியின் ஒரு பகுதியாக இருந்த ராஜேஸ்வரி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது தந்தை ரந்தீர் சிங்குடன் ஸ்டாண்டில் இருந்து பார்த்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரந்தீர் சிங் கூறியதாவது, “1982 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ட்ராப் டீம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது எனக்கு உண்மையிலேயே பெருமையான தருணம். இன்று வரலாறு திரும்பத் திரும்பியுள்ளது. அப்போது, OCA தலைவராக இருந்த எனது தந்தை எனக்கு பதக்கத்தை வழங்கினார்.
எனது மகள் பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குறைந்தது 20 பதக்கங்களை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செயல்பட்டோம். அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளிலும் இதேபோல் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. ஆஃப் ஆடவர் டீம் ட்ராப் போட்டியில் சென்னை, பிருத்விராஜ் தொண்டைமான், ஜோராவர் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனர்.