Asian Champions Trophy: ஹாக்கித் தொடர்: இந்தியா - சீனா கையில் குடுமி; அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்?
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, சௌத் கொரியா என மொத்தம் 6 அணிகள் விளையாடி வரும் இந்த தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா மற்றும் மலேசியா அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை இன்றைய போட்டிகள் தீர்மானிக்கவுள்ளன. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, மூன்றாவது இடத்தில் சௌத் கொரியாவும் 4வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இரு அணிகளும் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் சௌத் கொரியா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சௌத் கொரியா அணி இன்றைய போட்டியில் மலேசியாவையும் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இந்தியாவையும் எதிர்கொள்ளவுள்ளன. அதேபோல் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் தலா 2 புள்ளிகளுடன் 5 மற்றும் 6வது இடத்தில் உள்ள ஜப்பான் மற்றும் சீனா அணி மற்றொரு ஆட்டத்தில் மோதிக்கொள்கின்றன.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற சில வாய்ப்புகள் உள்ளது அது குறித்து காணலாம்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வெல்லும்போது பாகிஸ்தான் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும். ஒருவேளை இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினால், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் சீனா வெல்ல வேண்டும். அப்படி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் அணி டிரா செய்து, சீனாவுக்கு எதிரான போட்டியை ஜப்பான் அணி 4 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஜப்பான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
அதேபோல் மலேசிய அணிக்கு எதிராக சௌத் கொரியா அணி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியம். ஒருவேளை சௌத் கொரியா அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். ஒரு கோல் வித்தியாசத்தில் சௌத் கொரியா அணி தோல்வியைத் தழுவி, இந்தியாவுடனா போட்டியில் பாகிஸ்தான் அணி டிரா செய்து, ஜப்பான் அணி தோல்வியோ அல்லது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றியோ பெற்றால் பாகிஸ்தான் அணி எளிமையாக அரையிறுதிக்குள் நுழைந்து விடும்.
மேலும், இன்று நடக்கும் முதல் போட்டியில் ஜப்பன் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியுடன் புள்ளிப்பட்டியலில் சமநிலையில் இருக்கும். ஆனால் கோல் வித்தியாச அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.