பதவி உயர்வு கிடைக்கலையா? இதோ, தீர்வு தரும் வல்வில் ராமரின் அருள் - இத்தலம் எங்குள்ளது?
தஞ்சை மாவட்டம் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோயிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: எத்தனை வருஷமாக கடுமையாக உழைச்சாலும் பதவி உயர்வு கிடைக்கலையே என்று வேதனையில் இருப்பவர்களுக்கு நல்வழியாக அமைந்துள்ளது திருப்புள்ளம்பூதங்குடி ராமர் கோயில் என்று பயனடைந்தவர்கள் மனம் நிறைந்து தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோயிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. இதை விட ஒரு சிறப்பு இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ராமர் காட்சி அளிக்கிறார்.

பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள் இந்த கோயில்பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார்.
இராமாயண கதையின் படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை இராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு, வான வெளியில் ராவணனை எதிர்த்து நிற்க, இருவர் மத்தியிலும் கடும் சண்டை நடந்தது. இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட இராமா இராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடி வந்த ராமன், லட்சுமணனிடம், ஜடாயு, சீதையை தென்திசை நோக்கி ராவணன் தூக்கி செல்வதை கூறி உயிர் நீத்தார்.
ஜடாயு இராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தரிசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று. இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல பல சிறப்புகளை கொண்டு இத்தலம் விளங்கி வருகிறது.
ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கையாழ:வார், அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயு விற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார்.
பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள், பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு வந்து வேண்டிக்கொண்டு பலன் அடைந்தவர்களே இதற்கு சாட்சி.





















