Vinayagar Chaturthi 2023: தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு
தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதேபோல் திருவையாறு பகுதியில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் ஸ்ரீவிஸ்வரூப விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி சார்பில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், கவுன்சிலர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பிரமாண்டமான விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேஸ்வரன், மருத்துவர் பிரிவு மாநில செயலாளர் பாரதிமோகன், நெசவாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் உமாபதி, மாவட்ட செயலாளர் அம்ரித் அரசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன் மாரியப்பன், மகளிர் அணி மாவட்ட தலைவி கவிதா, மாநகர தலைவி உமாராணி, இந்து எழுச்சிப் பேரவை நிறுவனத் தலைவர் பழ. சந்தோஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விநாயகர் சிலை மூன்று நாட்கள் பொதுமக்களால் பூஜிக்கப்படும். பின்னர் தஞ்சை மாநகரில் 101 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் தஞ்சை ரெயிலடிக்கு கொண்டு வரப்படும். தொடர்ந்து ஊர்வலமாக காந்திஜி ரோடு, தெற்கு வீதி , மேல வீதி ,வடக்கு வீதி, கொடி மரத்து மூலை வழியாக கரந்தை வடவாற்றில் விசர்ஜனம் செய்யப்படும் என்று விழா குழு ஒருங்கிணைப்பாளரும் பா.ஜ.க. மாவட்ட பொருளாளருமான விநாயகம் தெரிவித்தார்.
திருவையாறு அருகே ஆசனூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. திருவையாறு அடுத்த ஆசனூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ம் தேதி விநாயகரை பிரதிஷ்டை செய்து தினந்தோறும் வழிபாடு நடத்தி வந்தனர். தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று மாலை விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்கு முக்கிய ராஜ வீதிகளின் வழியாக ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க கொண்டு சென்றனர்.
வீடுகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து 4 அடி கொண்ட சக்தி விநாயகரை வழிபாடு செய்தார்கள். ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சக்தி விநாயகர் சிலை காவிரி ஆற்றுக்கரையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.