Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு சிலை வாங்கப்போறீங்களா? ப்ளீஸ் இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க..
Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போது முதல் சிலைகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்பும், எந்தவொரு சுப நிகழ்ச்சிகளை தொடங்கும் முன்பும் அந்த காரியம் வெற்றியடைய விநாயகப் பெருமானை வணங்குவது ஐதீகம் ஆகும். பக்தர்களுக்கு சீரும், சிறப்பும் கொண்ட பெருமையான வாழ்வைத் தரும் விநாயகப் பெருமான் மிக எளிமையான கடவுளாக காட்சி தருகிறார்.
எளிமையும், பொறுமையும் மிகுந்த விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளான விநாயகர் சதுர்த்தி மிக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது இந்தியாவில் வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பெரும்பாலும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வாங்கி வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். அப்படி நாம் வாங்கும் விநாயகர் சிலைகள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
தும்பிக்கை:
விநாயகர் சிலையை வாங்கும்போது மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டியது தும்பிக்கை ஆகும். விநாயகருக்கு அம்சமே அவரது தும்பிக்கை ஆகும். அந்த விநாயகரின் சிலையை வாங்கும்போது விநாயகரின் தும்பிக்கை இடதுபுறம் இருக்கும் வகையில் வாங்க வேண்டும். இடதுபுறம் தும்பிக்கை அமைந்த நிலையில் உள்ள விநாயகரை வணங்குவதால், நாம் செய்யும் செயலில் தெளிவு பிறக்கும். வீடுகளில் வாங்கி வைக்கும் விநாயகர் சிலைகளில் வலது புறம் தும்பிக்கை இருக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பது நம்பிக்கை.
எலி:
விநாயகப் பெருமானின் வாகனம் எலி என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். விநாயகப் பெருமானின் சிலையை வாங்கும்போது அந்த சிலையில் அவரது வாகனமான எலி இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். அதேபோல, விநாயகரின் கையில் பல், அங்குசம் இருந்தால் அது இன்னும் சிறப்பு ஆகும். விநாயகரின் நான்காவது கையில் மோதகம் இருக்க வேண்டும். விநாயகப் பெருமானின் தும்பிக்கை அதை எடுக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.
நிறம்:
விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில், பல வடிவங்களில் கிடைக்கும். தற்போது திரைப்படங்களில் வருவதை போல எல்லாம் ( உதாரணத்திற்கு பாகுபலி) போன்ற விநாயகர் சிலைகள் கூட கிடைக்கிறது. ஆனால், நாம் வீட்டிற்கு வாங்கி வணங்கும் விநாயகர் சிலைக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. அதாவது, வீட்டிற்கு வாங்கும் விநாயகர் சிலை சிவப்பு நிறத்தில் இருப்பது சிறப்பு ஆகும். விநாயகர் சதுர்த்திக்காக நாம் வாங்கி கரைக்கும் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருந்தால் சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெமிக்கல் சேர்க்கப்படாத களிமண் சிலைகளை வாங்குவதால் நாம் சூழல் கேட்டை உருவாக்காமல் இருக்கலாம். பண்டிகையையும் பண்டைய முறைப்படி கொண்டாடலாம்.
மேலே கூறிய அம்சங்கள் விநாயகர் சிலையை வாங்கும்போது இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம் ஆகும். விநாயகர் சிலையை பொறுத்த மட்டில், ஒவ்வொரு வகையான விநாயகர் சிலையும் ஒருவித பலன் அளிக்கக்கூடியது.
உதாரணத்திற்கு, குழந்தை இல்லாத தம்பதிகள் பால விநாயகரை வீட்டில் வாங்கி வைத்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.
மேலும் படிக்க: Marriage: இன்னும் கல்யாணம் ஆகலையா..? செல்ல வேண்டிய கோயிலும்..செய்ய வேண்டிய பரிகாரமும் இதுதான்..!
மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2023: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்ன தேதி? என்ன கிழமை.? முழு விவரம் உள்ளே..!