Thiruvannamalai: திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் தெலுங்கு மக்கள் - வருகைக்கு காரணம் என்ன ?
Tiruvannamalai Temple : சமீப காலமாகவே திருவண்ணாமலை கோயிலுக்கு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை தீபம் Tiruvannamalai Deepam: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்கி வருகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால், நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார். திருவண்ணாமலை கோயிலைப் பொறுத்தவரை அக்னி வடிவில், அண்ணாமலையார் காட்சியளிக்கிறார் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருவது, மிகவும் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையார் கிரிவலம் பாதையில், பொதுமக்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலம் - Thiruvanamalai Temple
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் மேற்கொண்டால் பாவங்கள் தீர்ந்து, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை சுற்றி ஆயிரம் சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே பிற கோயில்களை விட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ளது.
அண்டை மாநிலத்தவர் படையெடுப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, கிரிவலம் வருபவர்களின் பக்தர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவே இருந்து வந்தனர். இந்தநிலையில் சமீப காலமாக பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வருகை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. விடுமுறை தினங்கள் மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் வெளிமாநில பக்தர்களால் திருவண்ணாமலை நிரம்பி காணப்படுகிறது.
வெளி மாநில பக்தர்களின் வருகைக்கு காரணம் என்ன ?
தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை திருப்பதிக்கு செல்வதை விட திருவண்ணாமலைக்கு செல்வது அதிக பலன் கொடுக்கும் என சைவம் பின்பற்றும், சாமியார்களின் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பரவலாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் வருகை திருவண்ணாமலை அதிகரிக்க தொடங்கியது. திருப்பதிக்கு தெலங்கானா வருமானம் போய்விடக்கூடாது என்ற அரசியல் பின்னணியும் இதில் இருப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
இதேபோன்று ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்களும் திருவண்ணாமலைக்கு தொடர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா மாநிலத்தை பொருத்தவரை அடித்தட்டு மற்றும் நடுத்தர வருடத்தை சார்ந்த மக்கள், சாமியார்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல சாமியார்கள் சமீப காலமாக யூடியூப் மூலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் குறித்த பெருமைகளை பேசி வருகின்றனர்.
திருவண்ணாமலை பொருத்தவரை கிரிவலம், சாமி தரிசனம் மட்டுமின்றி சித்தர்கள் வாழும் இடமாக நம்பப்படுவதால், சித்தர்களை தரிசிக்க முடியும் என பெரும்பாலான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கர்நாடகாவிலும் அங்கிருக்கும் சைவ மடங்களின் வழியே திருவண்ணாமலையின் பெருமைகள் அறிந்து கூட்டம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலைக்கு பக்தர்களை தங்களது சொந்த செலவில் கொண்டு வருபவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதால், அதன் மூலமும் கூட்டம் நிரம்பி அதிகரித்து வருவதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
இதேபோன்று சமீப காலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்களின் வருகையும் அதிகரித்திருப்பதால், அதன் மூலமும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் தீபத் திருவிழாவை, லட்சக்கணக்கான வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.